5011
எட்டும் இரண்டும்இதுஎன் றெனக்குச் சுட்டிக் காட்டி யே 
எட்டா நிலையில் இருக்கப் புரிந்தாய் இட்டுக் கூட்டி யே 
துட்ட வினையைத் தீர்த்து ஞானச் சுடருள் ளேற்றி யே 
தூண்டா தென்றும் விளங்க வைத்தாய் உண்மை சாற்றி யே எனக்கும் உனக்கும்  
5012
அருளாம் பெரிய வெளிக்குள் சோதி வடிவ னாகி யே 
அரசு செலுத்தும் தனித்த தலைமைப் பரம யோகி யே 
பொருளாய் எனையும் உளங்கொண் டளித்த புனித நாத னே 
போற்று நாத முடிவில் நடஞ்செய் கமல பாத னே எனக்கும் உனக்கும்  
5013
உருவும் அருவும் உபய நிலையும் உடைய நித்த னே 
உயிருள் நிறைந்த தலைவ எல்லாம் வல்ல சித்த னே 
மருவும் துரிய வரையுள் நிறைந்து வயங்கும் பரம மே 
மன்றில் பரமா னந்த நடஞ்செய் கின்ற பிரம மே எனக்கும் உனக்கும்  
5014
அன்னே என்னை ஆண்ட தலைவ அடியன் உள்ள மே 
அமர்ந்த துணைவ எனக்குக் கிடைத்த அமுத வெள்ள மே 
பொன்னே பொன்னில் பொலிந்து நிறைந்த புனித வான மே 
புனித வானத் துள்ளே விளங்கும் புரண ஞான மே எனக்கும் உனக்கும்  
5015
சமயத் தெய்வம் பலவும் சிறிய துரும்ப தென்ன வே 
சாற்றப் புகினும் சாலார்அருளின் பெருமை உன்ன வே 
அமையும் அண்டப் பகுதி பலவும் அணுவின் பொடியி லே 
அனந்தத் தொன்றென் றுரைத்துஞ் சாலா நின்பொன் னடியி லே எனக்கும் உனக்கும்