5016
அப்பா நின்னை அடைந்த என்னை ஒப்பார் யாவ ரே 
ஆறா றகன்ற நிலையை அடைந்தான் என்பர் தேவ ரே 
இப்பா ராதி பூதம் அடங்குங் காலும் நின்னை யே 
ஏத்திக் களித்து வாழ்வேன் இதற்கும் ஐய மென்னை யே  எனக்கும் உனக்கும்   
5017
என்னை மறைத்த மறைப்பை நீக்கி என்னைக் காட்டி யே 
இறைவ நினையும் காட்டி வளர்த்தாய் அமுதம் ஊட்டி யே 
முன்னை மறைக்கும் எட்டா நினது பெருமை தன்னை யே 
முன்னி மகிழ்ந்து பாடப் புரிந்தாய் அடிமை என்னை யே  எனக்கும் உனக்கும்   
5018
எண்ணுந் தோறும் எண்ணுந் தோறும் என்னுள் இனிக்கு தே 
இறைவ நின்னைப் பாட நாவில் அமுதம் சனிக்கு தே 
கண்ணும் கருத்தும் நின்பால் அன்றிப் பிறர்பால் செல்லு மோ 
கண்டேன் உன்னை இனிமேல் என்னை மாயை வெல்லு மோ  எனக்கும் உனக்கும்   
5019
விந்தோ நாத வெளியும் கடந்து மேலும் நீளு தே 
மேலை வெளியும் கடந்துன் அடியர் ஆணை ஆளு தே 
அந்தோ உனது பெருமை சிறிதும் அறிவார் இல்லை யே 
அறிந்தால் உருகி இன்ப வடிவம் ஆவர் ஒல்லை யே  எனக்கும் உனக்கும்   
5020
இறுகப் பிடித்துக் கொண்டேன் பதத்தை இனிநான் விடுவ னோ 
எந்தாய் பாதம் பிடித்த கையால் வேறு தொடுவ னோ 
குறுகப் பயந்து கூற்றும் ஓடிக் குலைந்து போயிற் றே 
கோவே உன்றன் அருட்சிற் சோதி என்ன தாயிற் றே  எனக்கும் உனக்கும்