5021
காய்க்கும் பருவம் தன்னைப் பழுத்த பருவம் ஆக்கி யே 
கனக சபையில் நடிக்கின் றாய்ஓர் காலைத் தூக்கி யே 
நாய்க்குத் தவிசிட் டொருபொன் முடியும் நன்று சூட்டி யே 
நட்ட நடுவே வைத்தாய் கருணை அமுதம் ஊட்டி யே  எனக்கும் உனக்கும்    
5022
கல்லை நோக்கிக் கனிந்து பழுத்த கனிய தாக்கி யே 
கனக சபையில் நடிக்கின் றாய்ஓர் காலைத் தூக்கி யே 
புல்லை முடிக்கும் அணிகின் றாய்என் புன்சொல் மாலை யே 
புனைந்தென் உளத்தில் இருக்கப் புரிந்தாய் நின்பொற் காலை யே  எனக்கும் உனக்கும்   
5023
சாதல் பிறத்தல் என்னும் அவத்தைத் தவிர்த்துக் காலை யே 
தனித்துன் அருளின் அமுதம் புகட்டிக் கொடுத்தாய் மேலை யே 
ஓதல் உணர்தல் உவத்தல் எனக்கு நின்பொற் பாத மே 
உலக விடயக் காட்டில் செல்லா தெனது போத மே  எனக்கும் உனக்கும்   
5024
அருளும் பொருளும் பெற்றேன் அடிய னாகி நானு மே 
அஞ்சேன் மாயை வினைகட் கொருசிற் றளவ தேனு மே 
இருளும் நிறத்துக் கூற்றைத் துரத்தி அருள்சிற் சோதி யே 
என்றன் அகத்தும் புறத்தும் விளங்கு கின்ற தாதி யே  எனக்கும் உனக்கும்   
5025
காமக் கடலைக் கடந்து வெகுளிக் கடலை நீந்தி னேன் 
கடிய மயக்கக் கடலைத் தாண்டி அடியை ஏந்தி னேன் 
சேமப் பொதுவில் நடங்கண் டெனது சிறுமை நீங்கி னேன் 
சிற்றம் பலத்து நடங்கண் டுவந்து மிகவும் ஓங்கி னேன்  எனக்கும் உனக்கும்