5026
தாங்கல் விடுதல் இரண்டும் எனக்குச் சமம தாயிற் றே 
சகத்தில் வழங்கும் மாயை வழக்குத் தவிர்ந்து போயிற் றே 
ஏங்கல் சலித்தல் இரண்டும் இன்றி இளைப்பு நீங்கி னேன் 
எந்தாய் கருணை அமுதுண் டின்பப் பொருப்பில் ஓங்கி னேன்  எனக்கும் உனக்கும்    
5027
உறவு பகைஎன் றிரண்டும் எனக்கிங் கொன்ற தாயிற் றே 
ஒன்றென் றிரண்டென் றுளறும் பேதம் ஓடிப் போயிற் றே 
மறவு நினைவென் றென்னை வலித்த வலிப்பு நீங்கி னேன் 
மன்றில் பரமா னந்த நடங்கண் டின்பம் ஓங்கி னேன்  எனக்கும் உனக்கும்   
5028
உன்னைக்கண்டு கொண்டேன் கண்ட வுடன்இங் கென்னை யே 
உலக மெல்லாம் கண்டு கொண்ட உவப்பி தென்னை யே 
என்னைக் கண்டு கொண்ட காலத் திறைவ நின்னை யே 
யாரும் கண்டு கொண்டார் இல்லை யாங்க தென்னை யே  எனக்கும் உனக்கும்   
5029
மலத்தில் புழுத்த புழுவும் நிகர மாட்டா நாயி னேன் 
வள்ளல் கருணை அமுதுண் டின்ப நாட்டான் ஆயி னேன் 
குலத்தில் குறியில் குணத்தில் பெருமை கொள்ளா நாயி னேன் 
கோதில் அமுதுண் டெல்லா நலமும் உள்ளான் ஆயி னேன்  எனக்கும் உனக்கும்   
5030
கடைய நாயில் கடைய நாய்க்கும் கடையன் ஆயி னேன் 
கருணை அமுதுண் டின்ப நாட்டுக் குடையன் ஆயி னேன் 
விடயக் காட்டில் ஓடித் திரிந்த வெள்ளை நாயி னேன் 
விடையாய் நினக்கு மிகவும் சொந்தப் பிள்ளை ஆயி னேன்  எனக்கும் உனக்கும்