5031
அயனும் மாலும் தேடித் தேடி அலந்து போயி னார் 
அந்தோ இவன்முன் செய்த தவம்யா தென்ப ராயி னார் 
மயனும் கருத மாட்டாத் தவள மாடத் துச்சி யே 
வயங்கும் அணைமேல் வைத்தாய் சிறிய நாயை மெச்சி யே  எனக்கும் உனக்கும்   
5032
வல்லாய் உனது கருணை அமுதென் வாய்க்கு வந்த தே 
மலமும் மாயைக் குலமும் வினையும் முழுதும் வெந்த தே 
எல்லா நலமும் ஆன அதனை உண்டு வந்த தே 
இறவா தென்றும் ஓங்கும் வடிவம் எனக்கு வந்த தே  எனக்கும் உனக்கும்   
5033
சிற்றம் பலத்தில் நடங்கண் டவர்காற் பொடிகொள் புல்ல தே 
சிருட்டி முதல்ஓர் ஐந்து தொழிலும் செய்ய வல்ல தே 
பற்றம் பலத்தில் வைத்தார் தம்மைப் பணியும் பத்த ரே 
பரம பதத்தர் என்று பகர்வர் பரம முத்த ரே  எனக்கும் உனக்கும்   
5034
சிருட்டி முதல்ஓர் ஐந்து தொழிலும் செய்யென் றென்னை யே 
செல்வப் பிள்ளை யாக்கி வளர்க்கின் றாய்இ தென்னை யே 
தெருட்டித் திருப்பொற் பதத்தைக் காட்டி அமுதம் ஊட்டி யே 
திகழ நடுவைத் தாய்சன் மார்க்க சங்கம்கூட்டி யே  எனக்கும் உனக்கும்   
5035
அடியன்ஆக்கிப் பிள்ளைஆக்கி நேயன்ஆக்கி யே 
அடிகள்ஆக்கிக் கொண்டாய் என்னை அவலம் நீக்கி யே 
படியு ளோரும் வானு ளோரும் இதனை நோக்கி யே 
பதியும் ஓர வாரன் என்பர் பரிவு தேக்கி யே  எனக்கும் உனக்கும்