5036
அண்ணா எனையும் பொருளென் றெண்ணி இரவும் பகலு மே 
அகத்தும் புறத்தும் திரிகின் றாய்இவ் வுலகென் புகலு மே 
தண்ணா ரமுதம் மிகவும் எனக்குத் தந்த தன்றி யே 
தனியே இன்னும் தருகின் றாய்என் னறிவின் ஒன்றி யே எனக்கும் உனக்கும்  
5037
வேதா கமத்தின் அடியும் நடுவும் முடியு மற்று மே 
வெட்ட வெளிய தாகி விளங்கக் கண்டேன் முற்று மே 
நாதா சிறிய நாய்க்கும் கடையேன் முற்றும் கண்ட தே 
நானோ கண்டேன் எந்தாய் கருணை நாட்டம் கண்ட தே எனக்கும் உனக்கும்  
5038
புழுவில் புழுத்த புழுவும் நிகரப் போதா நாயி னேன் 
பொதுவில் நடிக்கும் தலைவ நினக்கே அடிமை ஆயி னேன் 
தழுவற் கரிய பெரிய துரியத் தம்பத் தேறி னேன் 
தனித்தப் பாலோர் தவள மாடத் திருந்து தேறி னேன் எனக்கும் உனக்கும்  
5039
கடையன் எனது கொடிய கடின நெஞ்சக் கல்லை யே 
கனிய தாக்கித் தூக்கிக் கொண்டாய் துரியத் தெல்லை யே 
உடையாய் துரியத் தலத்தின் மேல்நின் றோங்குந் தலத்தி லே 
உன்பால் இருக்க வைத்தாய் என்னை உவந்து வலத்தி லே எனக்கும் உனக்கும்  
5040
அறிந்த நாள்கள் தொடங்கி இற்றைப் பகலின் வரையு மே 
அடியேன் பட்ட பாட்டை நினைக்கில் கல்லும் கரையு மே 
எறிந்தப் பாடு முழுதும் பெரிய இன்ப மாயிற் றே 
எந்தாய் கருணை எனக்கு மிகவும் சொந்த மாயிற் றே எனக்கும் உனக்கும்