5056
அண்ட கோடி அனைத்தும் காணும் கண்கள் எய்தி யே 
அறிந்தேன் அங்கைக் கனிபோல் அவற்றில் உள்ள செய்தி யே 
பிண்ட கோடி முழுதும்காணப் பெற்று நின்னை யே 
பேசிப் பேசி வியக்கின் றேன்இப் பிறவி தன்னை யே எனக்கும் உனக்கும்  
5057
சிற்றம் பலத்தின் நடனம் காட்டிச் சிவத்தைக் காட்டி யே 
சிறப்பாய் எல்லாம் வல்ல சித்தித் திறத்தைக் காட்டி யே 
குற்றம் பலவும் தீர்த்தென் தனக்கோர் முடியும் சூட்டி யே 
கோவே நீயும் என்னுள் கலந்து கொண்டாய் நாட்டி யே எனக்கும் உனக்கும்  
5058
சுத்த நிலையின் நடுநின் றெங்கும் தோன்றும் சோதி யே 
துரிய வெளியைக் கடந்தப் பாலும் துலங்கும் சோதி யே 
சித்தர் உளத்தில் சுடர்செய் தோங்கும் தெய்வச் சோதி யே 
சிற்றம் பலத்தில் நடஞ்செய் தெனக்குள் சிறந்த சோதி யே எனக்கும் உனக்கும்  
5059
அன்றே என்னை அடியன்ஆக்கி ஆண்ட சோதி யே 
அதன்பின் பிள்ளை ஆக்கிஅருள்இங் களித்த சோதி யே 
நன்றே மீட்டும் நேயன் ஆக்கிநயந்த சோதி யே 
நானும் நீயும் ஒன்றென் றுரைத்துநல்கு சோதி யே எனக்கும் உனக்கும்  
5060
நீயே வலிந்திங் கென்னை ஆண்ட நீதிச் சோதி யே 
நின்னைப் பாட என்னை வளர்க்கும் நிமலச் சோதி யே 
தாயே எனவந் தென்னைக் காத்த தருமச் சோதி யே 
தன்மை பிறரால் அறிதற் கரிய தலைமைச் சோதி யே எனக்கும் உனக்கும்