5226
பசியாத அமுதே பகையாத பதியே 
பகராத நிலையே பறையாத சுகமே 
நசியாத பொருளே நலியாத உறவே 
நடராஜ மணியே நடராஜ மணியே   
5227
புரையாத மணியே புகலாத நிலையே 
புகையாத கனலே புதையாத பொருளே 
நரையாத வரமே நடியாத நடமே 
நடராஜ நிதியே நடராஜ நிதியே   
5228
சிவஞான நிலையே சிவயோக நிறைவே 
சிவபோக உருவே சிவமான உணர்வே 
நவநீத மதியே நவநாத கதியே 
நடராஜ பதியே நடராஜ பதியே   
5229
தவயோக பலமே சிவஞான நிலமே 
தலையேறும் அணியே விலையேறு மணியே 
நவவார நடமே சுவகார புடமே 
நடராஜ பரமே நடராஜ பரமே   
5230
துதிவேத உறவே சுகபோத நறவே 
துனிதீரும் இடமே தனிஞான நடமே 
நதியார நிதியே அதிகார பதியே 
நடராஜ குருவே நடராஜ குருவே