5231
வயமான வரமே வியமான பரமே 
மனமோன நிலையே கனஞான மலையே 
நயமான உரையே நடுவான வரையே 
நடராஜ துரையே நடராஜ துரையே   
5232
பதியுறு பொருளே பொருளுறு பயனே 

பயனுறு நிறைவே நிறைவுறு வெளியே 
மதியுறும் அமுதே அமுதுறு சுவையே 

மறைமுடி மணியே மறைமுடி மணியே   
5233
அருளுறு வெளியே வெளியுறு பொருளே 

அதுவுறு மதுவே மதுவுறு சுவையே 
மருளறு தெருளே தெருளுறு மொளியே 

மறைமுடி மணியே மறைமுடி மணியே   
5234
தருவளர் நிழலே நிழல்வளர் சுகமே 

தடம்வளர் புனலே புனல்வளர் நலனே 
திருவளர் உருவே உருவளர் உயிரே 

திருநட மணியே திருநட மணியே   
5235
உயிருறும் உணர்வே உணர்வுறும் ஒளியே 

ஒளியுறு வெளியே வெளியுறு வெளியே 
செயிரறு பதியே சிவநிறை நிதியே 

திருநட மணியே திருநட மணியே