5296
எவ்வுயிரும் பொதுஎனக்கண் டிரங்கிஉப 

கரிக்கின்றார் யாவர் அந்தச் 
செவ்வியர்தம் செயல்அனைத்தும் திருவருளின் 

செயல்எனவே தெரிந்தேன் இங்கே 
கவ்வைஇலாத் திருநெறிஅத் திருவாளர் 

தமக்கேவல் களிப்பால் செய்ய 
ஒவ்வியதென் கருத்தவர்சீர் ஓதிடஎன் 

வாய்மிகவும் ஊர்வ தாலோ   
5297
எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும் 

தம்உயிர்போல் எண்ணி உள்ளே 
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் 

யாவர்அவர் உளந்தான் சுத்த 
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் 

இடம்எனநான் தெரிந்தேன் அந்த 
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன் 

சிந்தைமிக விழைந்த தாலோ   
5298
கருணைஒன்றே வடிவாகி எவ்வுயிரும் 

தம்உயிர்போல் கண்டு ஞானத் 
தெருள்நெறியில் சுத்தசிவ சன்மார்க்கப் 

பெருநீதி செலுத்தா நின்ற 
பொருள்நெறிசற் குணசாந்தப் புண்ணியர்தம் 

திருவாயால் புகன்ற வார்த்தை 
அருள்நெறிவே தாகமத்தின் அடிமுடிசொல் 

வார்த்தைகள்என் றறைவ ராலோ   
 சாலையப்பனை வேண்டல் 

கொச்சகக் கலிப்பா   
5299
மன்னப்பா மன்றிடத்தே மாநடஞ்செய் அப்பாஎன் 
தன்னப்பா சண்முகங்கொள் சாமியப்பா எவ்வுயிர்க்கும் 
முன்னப்பா பின்னப்பா மூர்த்தியப்பா மூவாத 
பொன்னப்பா ஞானப் பொருளப்பா தந்தருளே   
 கட்டளைக் கலித்துறை  
5300
ஆதிஅப் பாநம் அனாதியப் பாநங்கள் அம்மைஒரு 
பாதிஅப் பாநிரு பாதிஅப் பாசிவ பத்தர்அனு 
பூதிஅப் பாநல் விபூதிஅப் பாபொற் பொதுநடஞ்செய் 
சோதிஅப் பாசுயஞ் சோதிஅப் பாஎனைச் சூழ்ந்தருளே