5301
அண்டஅப் பாபகிர் அண்டஅப் பாநஞ் சணிந்தமணி 
கண்டஅப் பாமுற்றும் கண்டஅப் பாசிவ காமிஎனும் 
ஒண்தவப் பாவையைக் கொண்டஅப் பாசடை ஓங்குபிறைத் 
துண்டஅப் பாமறை விண்டஅப் பாஎனைச் சூழ்ந்தருளே   
5302
வேலைஅப் பாபடை வேலைஅப் பாபவ வெய்யிலுக்கோர் 
சோலைஅப் பாபரஞ் சோதிஅப் பாசடைத் துன்றுகொன்றை 
மாலைஅப் பாநற் சமரச வேதசன் மார்க்கசங்கச் 
சாலைஅப் பாஎனைத் தந்தஅப் பாவந்து தாங்கிக்கொள்ளே   
5303
மெச்சிஅப் பாவலர் போற்றப் பொதுவில் விளங்கியஎன் 
உச்சிஅப் பாஎன் னுடையஅப் பாஎன்னை உற்றுப்பெற்ற 
அச்சிஅப் பாமுக்கண் அப்பாஎன் ஆருயிர்க் கானஅப்பா 
கச்சிஅப் பாதங்கக் கட்டிஅப் பாஎன்னைக் கண்டுகொள்ளே   
5304
எக்கரை யும்மின்றி ஓங்கும் அருட்கடல் என்றுரைக்கோ 
செக்கரை வென்றபொன் என்கோ படிகத் திரளதென்கோ 
திக்கரை அம்பரன் என்கோஎன் உள்ளத்தில் தித்திக்கின்ற 
சக்கரைக் கட்டிஎன் கோநினைத் தான்மன்றில் தாண்டவனே   
5305
ஒட்டிஎன் கோதறுத் தாட்கொண் டனைநினை ஓங்கறிவாம் 
திட்டிஎன் கோஉயர் சிற்றம் பலந்தனில் சேர்க்கும்நல்ல 
வெட்டிஎன் கோஅருட் பெட்டியில் ஓங்கி விளங்கும்தங்கக் 
கட்டிஎன் கோபொற் பொதுநடஞ் செய்யுமுக் கண்ணவனே   
 மாயை நீக்கம் 

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்