5306
அருட்பெருங் கடலே என்னை ஆண்டசற் குருவே ஞானப் 
பொருட்பெருஞ் சபையில் ஆடும் பூரண வாழ்வே நாயேன் 
மருட்பெரு மாயை முற்றும் மடிந்தன வினைக ளோடே 
இருட்பெருந் தடையை நீக்கி இரவியும் எழுந்த தன்றே   
5307
மாணவ நிலைக்கு மேலே வயங்கிய ஒளியே மன்றில் 
தாணவ நடஞ்செய் கின்ற தனிப்பெருந் தலைவ னேஎன் 
கோணவ மாயை எல்லாம் குலைந்தன வினைக ளோடே 
ஆணவ இருளை நீக்கி அலரியும் எழுந்த தன்றே   
5308
தற்பரம் பொருளே வேதத் தலைநின்ற ஒளியே மோனச் 
சிற்பர சுகமே மன்றில் திருநடம் புரியுந் தேவே 
வற்புறு மாயை எல்லாம் மடிந்தன வினைக ளோடே 
இற்படும் இருளை நீக்கி இரவியும் எழுந்த தன்றே   
 சிதம்பரேசன் அருள்

கலி விருத்தம்   
5309
சிற்றறி வுடையநான் செய்த தீமைகள் 
முற்றவும் பொறுத்தருள் முனிந்திடேல் இன்றே 
தெற்றென அருட்பெருஞ் சோதிச் செல்வமும் 
மற்றவும் வழங்குக வரதனே என்றேன்   
5310
என்றசொல் செவிமடுத் திறையும் அஞ்சிடேல் 
இன்றுனக் கருட்பெருஞ் சோதி ஈந்தனம் 
நன்றுற மகிழ்கஎந் நாளுஞ் சாவுறா 
வென்றியும் அளித்தனம் என்று மேவினான்