5311
மேவிஎன் உள்ளகத் திருந்து மேலும்என் 
ஆவியிற் கலந்திவன் அவன்என் றோதும்ஓர் 
பூவியற் பேதமும் போக்கி ஒன்றதாய்த் 
தேவியற் புரிந்தனன் சிதம்ப ரேசனே   
 போற்றிச் சந்த விருத்தம் 

சந்த விருத்தம்   
5312
போற்றி நின்அருள் போற்றி நின்பொது 
போற்றி நின்புகழ் போற்றி நின்உரு 
போற்றி நின்இயல் போற்றி நின்நிலை 
போற்றி நின்நெறி போற்றி நின்சுகம் 
போற்றி நின்உளம் போற்றி நின்மொழி 
போற்றி நின்செயல் போற்றி நின்குணம் 
போற்றி நின்முடி போற்றி நின்நடு 
போற்றி நின்அடி போற்றி போற்றியே   
5313
போற்றி நின்இடம் போற்றி நின்வலம் 
போற்றி நின்நடம் போற்றி நின்நலம் 
போற்றி நின்திறம் போற்றி நின்தரம் 
போற்றி நின்வரம் போற்றி நின்கதி 
போற்றி நின்கலை போற்றி நின்பொருள் 
போற்றி நின்ஒளி போற்றி நின்வெளி 
போற்றி நின்தயை போற்றி நின்கொடை 
போற்றி நின்பதம் போற்றி போற்றியே   
5314
போற்று கின்றஎன் புன்மை யாவையும் 

பொறுத்த நின்பெரும் பொறுமை போற்றிஎன் 
ஆற்று வேன்உனக் கறிகி லேன்எனக் 

கறிவு தந்தபே ரறிவ போற்றிவான் 
காற்று நீடழல் ஆதி ஐந்துநான் 

காணக் காட்டிய கருத்த போற்றிவன் 
கூற்று தைத்துநீத் தழிவி லாஉருக் 

கொள்ள வைத்தநின் கொள்கை போற்றியே   
 பாடமும் படிப்பும்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்   
5315
அம்பலம் சேர்ந்தேன் எம்பலம் ஆர்ந்தேன் 

அப்பனைக் கண்டேன் செப்பமுட் கொண்டேன் 
உம்பர் வியப்ப இம்பர் இருந்தேன் 

ஓதா துணர்ந்தேன் மீதானம் உற்றேன் 
நம்பிடில் அணைக்கும் எம்பெரு மானை 

நாயகன் தன்னைத் தாயவன் தன்னைப் 
பம்புறப் பாடிப் படிக்கின்றேன் மேலும் 

படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே