5326
அபயம் பதியே அபயம் பரமே 
அபயம் சிவமே அபயம் - உபய 
பதத்திற் கபயம் பரிந்தென்உளத் தேநல் 
விதத்தில் கருணை விளை   
5327
கருணா நிதியே அபயம் கனிந்த 
அருணா டகனே அபயம் - மருணாடும் 
உள்ளக் கவலை ஒழிப்பாய்என் வன்மனத்துப் 
பொள்ளற் பிழைகள் பொறுத்து   
 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்   
5328
இணக்கறியீர் இதம்அறியீர் இருந்தநிலை அறியீர் 

இடம்அறியீர் தடம்அறியீர் இவ்வுடம்பை எடுத்த 
கணக்கறியீர் வழக்கறியீர் அம்பலத்தே மாயைக் 

கலக்கம்அற நடிக்கின்ற துலக்கம்அறி வீரோ 
பிணக்கறிவீர் புரட்டறிவீர்() பிழைசெயவே அறிவீர் 

பேருணவைப் பெருவயிற்றுப் பிலத்தில்இட அறிவீர் 
மணக்கறியே பிணக்கறியே வறுப்பேபேர்ப் பொரிப்பே 

வடைக்குழம்பே சாறேஎன் றடைக்க அறிவீரே   
 () பிரட்டறிவீர் - பொ சு பதிப்பு   
5329
உழக்கறியீர் அளப்பதற்கோர் உளவறியீர் உலகீர் 

ஊர்அறியீர் பேர்அறியீர் உண்மைஒன்றும் அறியீர் 
கிழக்கறியீர் மேற்கறியீர் அம்பலத்தே மாயைக் 

கேதம்அற நடிக்கின்ற பாதம்அறி வீரோ 
வழக்கறிவீர் சண்டையிட்டே வம்பளக்க அறிவீர் 

வடிக்கும்முன்னே சோறெடுத்து வயிற்றடைக்க அறிவீர் 
குழக்கறியே() பழக்கறியே கூட்டுவர்க்கக் கறியே 

குழம்பேசா றேஎனவும் கூறஅறி வீரே   
 () குழைக்கறியே - முதற்பதிப்பு, பொ சு, பி இரா, ச மு க 

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்   
5330
உணிக்கும் மூட்டுக்கும் கொதுகுக்கும் 

பேனுக்கும் உவப்புறப் பசிக்கின்றீர் 
துணிக்கும் காசுக்கும் சோற்றுக்கும் 

ஊர்தொறும் சுற்றிப்போய் அலைகின்றீர் 
பிணிக்கும் பீடைக்கும் உடலுளம் 

கொடுக்கின்றீர் பேதையீர் நல்லோர்கள் 
பணிக்கும் வேலைசெய் துண்டுடுத் 

தம்பலம் பரவுதற் கிசையீரே