5331
மழவுக்கும் ஒருபிடிசோ றளிப்பதன்றி 

இருபிடிஊண் வழங்கில் இங்கே 
உழவுக்கு முதல்குறையும் எனவளர்த்தங் 

கவற்றைஎலாம் ஓகோ பேயின் 
விழவுக்கும் புலால்உண்ணும் விருந்துக்கும் 

மருந்துக்கும் மெலிந்து மாண்டார் 
இழவுக்கும் இடர்க்கொடுங்கோல் இறைவரிக்கும் 

கொடுத்திழப்பர் என்னே என்னே   
5332
கடுகாட்டுக் கறிக்கிடுக தாளிக்க 

எனக்கழறிக் களிக்கா நின்ற 
சுடுகாட்டுப் பிணங்காள்இச் சுகமனைத்தும் 

கணச்சுகமே சொல்லக் கேண்மின் 
முடுகாட்டுக் கூற்றுவரும் சாவீரால் 

சாவதற்கு முன்னே நீவீர் 
இடுகாட்டுப்பிணங்கண்டால் ஏத்துமினோ 

எமையும்இவ்வா றிடுகஎன்றே   
5333
மதிப்பாலை அருட்பாலை ஆனந்தப் 

பாலைஉண்ண மறந்தார் சில்லோர் 
விதிப்பாலை அறியேம்தாய்ப் பாலைஉண்டு 

கிடந்தழுது விளைவிற் கேற்பக் 
கொதிப்பாலை உணர்வழிக்கும் குடிப்பாலை 

மடிப்பாலைக் குடிப்பார்அந்தோ 
துதிப்பாலை அருள்தருநம் தேவசிகா 

மணித்தேவைத் துதியார் அன்றே   
 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்   
5334
சிரிப்பிலே பொழுது கழிக்கும்இவ் வாழ்க்கைச் 

சிறியவர் சிந்தைமாத் திரமோ 
பொருப்பிலே தவஞ்செய் பெரியர்தம் மனமும் 

புளிப்பிலே துவர்ப்பிலே உவர்ப்புக் 
கரிப்பிலே கொடிய கயப்பிலே கடிய 

கார்ப்பிலே கார்ப்பொடு கலந்த 
எரிப்பிலே புகுவ தன்றிஎள் அளவும் 

இனிப்பிலே புகுகின்ற திலையே   
 கலிநிலைத்துறை   
5335
பூவார் கொன்றைச் செஞ்சடை யாளர் புகழாளர் 
ஈவார் போல்வந் தென்மனை புக்கார் எழில்காட்டி 
தேவார் தில்லைச் சிற்சபை மேவும் திருவாளர் 
ஆவா என்றார் என்னடி அம்மா அவர்சூதே   
 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்