5341
தூங்காதே விழித்திருக்கும் சூதறிவித் 

தெனைஆண்ட துரையே என்னை 
நீங்காதே என்னுயிரில் கலந்துகொண்ட 

பதியேகால் நீட்டிப் பின்னே 
வாங்காதே விரைந்திவண்நீ வரல்வேண்டும் 

தாழ்த்திடில்என் மனந்தான் சற்றும் 
தாங்காதே இதுநினது தனித்ததிரு 

வுளமறிந்த சரிதம் தானே   
5342
இயங்காளி புலிகரடி எனப்பெயர்கேட் 

டுளம்நடுங்கி இருந்தேன் ஊரில் 
சயங்காளிக் கோயிலைக்கண் டஞ்சிமனம் 

தழுதழுத்துத் தளர்ந்தேன் இந்தப் 
பயங்காளிப் பயல்போலப் பயந்தவர்கள் 

எங்குளர்காண் பதியே என்னை 
வயங்காளில் ஒருவன்என நினையேல்கைப் 

பிள்ளைஎன மதித்தி டாயே   
5343
சிறுசெயலைச் செயும்உலகச் சிறுநடையோர் 

பலபுகலத் தினந்தோ றுந்தான் 
உறுசெயலை அறியாஇச் சிறுபயலைப் 

பிடித்தலைத்தல் உவப்போ கண்டாய் 
தெறுசெயலைத் தவிர்த்தெல்லாச் சித்தியும்பெற் 

றிடஅழியாத் தேகன் ஆகப் 
பெறுசெயலை எனக்களித்தே மறுசெயலைப் 

புரிகஎனைப் பெற்ற தேவே   
 கலிநிலைத்துறை   
5344
அங்கே உன்றன் அன்பர்கள் எல்லாம் அமர்கின்றார் 
இங்கே நீதான் என்னள வின்னும் இரங்காயேல் 
எங்கே போகேன் யாரொடு நோகேன் எதுசெய்கேன் 
செங்கேழ் வேணித் திங்கள் அணிந்தருள் சிவனேயோ   
5345
ஈயோ டுறழும் சிறியேன் அளவில் எந்தாய்நின் 
சேயோ டுறழும் பேரருள் வண்ணத் திருவுள்ளம் 
காயோ பழமோ யாதோ அறியேன் கவல்கின்றேன் 
தீயோ டுறழும் திருவருள் வடிவச் சிவனேயோ   
 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்