5351
அருளா ரமுதே என்னுடைய 

அன்பே என்றன் அறிவேஎன் 
பொருளாய் அகத்தும் புறத்தும்என்னைப் 

புணர்ந்த கருணைப் பொருப்பேமெய்த் 
தெருளாம் ஒளியே வெளியாகச் 

சிற்றம் பலத்தே நடிக்கின்றோய் 
இருளா யினஎல் லாம்தவிர்த்தென் 

எண்ணம் முடிப்பாய் இப்போதே   
5352
மந்திரம் அறியேன் மற்றை 

மணிமருந் தறியேன் வேறு 
தந்திரம் அறியேன் எந்தத் 

தகவுகொண் டடைவேன் எந்தாய் 
இந்திரன் முதலாம் தேவர் 

இறைஞ்சப்பொன் மன்றில் வேணிச் 
சந்திரன் ஆட இன்பத் 

தனிநடம் புரியும் தேவே   
5353
கருணைக் கடலே அதில்எழுந்த 

கருணை அமுதே கனியமுதில் 
தருணச் சுவையே சுவைஅனைத்தும் 

சார்ந்த பதமே தற்பதமே 
பொருண்மெய்ப் பரமே சிதம்பரமாம் 

பொதுவில் நடிக்கும் பரம்பரமே 
தெருண்மெய்க் கருத்தில் கலந்தெனையும் 

சித்தி நிலைகள் தெரித்தருளே   
5354
கலக்கம் அற்றுநான் நின்றனைப் 

பாடியே களிக்கின்ற நாள்எந்நாள் 
இலக்கம் உற்றறிந் திடஅருள் 

புரிகுவாய் எந்தைஇவ் விரவின்கண் 
துலக்க முற்றசிற் றம்பலத் 

தாடுமெய்ச் சோதியே சுகவாழ்வே 
அலக்கண் அற்றிடத் திருவருள் 

புரியும்என் அப்பனே அடியேற்கே   
 கட்டளைக் கலிப்பா   
5355
பண்டு நின்திருப் பாதம லரையே 

பாடி யாடிய பத்திமை யோரைப்போல் 
தொண்டு கொண்டெனை ஆண்டனை இன்றுதான் 

துட்டன் என்றுது ரத்திடல் நன்றுகொல் 
குண்டு நீர்க்கடல் சூழுல கத்துளோர் 

குற்றம் ஆயிரங் கோடிசெய் தாலும்முன் 
கொண்டு பின்குலம் பேசுவ ரோஎனைக் 

குறிக்கொள் வாய்எண் குணந்திகழ் வள்ளலே   
 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்