5356
கண்ணெலாம் நிரம்பப் பேரொளி காட்டிக் 

கருணைமா மழைபொழி முகிலே 

விண்ணெலாம் நிறைந்த விளக்கமே என்னுள் 
மேவிய மெய்ம்மையே மன்றுள் 
எண்ணெலாம் கடந்தே இலங்கிய பதியே 

இன்றுநீ ஏழையேன் மனத்துப் 
புண்ணெலாம் தவிர்த்துப் பொருளெலாம் கொடுத்துப் 

புகுந்தென துளங்கலந் தருளே   
5357
அன்பிலேன் எனினும் அறிவிலேன் எனினும் 

அன்றுவந் தாண்டனை அதனால் 
துன்பிலேன் எனஇவ் வுலகெலாம் அறியச் 

சொல்லினேன் சொல்லிய நானே 
இன்பிலேன் எனஇன் றுரைத்திடல் அழகோ 

எனைஉல கவமதித் திடில்என் 
என்பிலே கலந்தாய் நினக்கும்வந் திடுமே 

எய்துக விரைந்தென திடத்தே   
 கட்டளைக் கலித்துறை   
5358
வான்வேண்டு சிற்றம் பலத்தே வயங்கி வளரமுதத் 
தேன்வேண்டி னேன்இத் தருணத் தருள்செய்க செய்திலையேல் 
ஊன்வேண்டும் என்னுயிர் நீத்துநின் மேற்பழி யோவிளைப்பேன் 
நான்வேண்டு மோபழி தான்வேண்டு மோசொல்க நாயகனே   
 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்   
5359
செவ்வணத் தவரும் மறையும்ஆ கமமும் 

தேவரும் முனிவரும் பிறரும் 
இவ்வணத் ததுஎன் றறிந்திடற் கரிதாம் 

எந்தைநின் திருவருள் திறத்தை 
எவ்வணத் தறிவேன் எங்ஙனம் புகல்வேன் 

என்தரத் தியலுவ தேயோ 
ஒவ்வணத் தரசே எனக்கென இங்கோர் 

உணர்ச்சியும் உண்டுகொல் உணர்த்தே   
5360
உணர்ந்துணர்ந் தாங்கே உணர்ந்துணர்ந் துணரா 

உணர்ந்தவர் உணர்ச்சியான் நுழைந்தே 
திணர்ந்தனர் ஆகி வியந்திட விளங்கும் 

சிவபதத் தலைவநின் இயலைப் 
புணர்ந்தநின் அருளே அறியும்நான் அறிந்து 

புகன்றிடும் தரஞ்சிறி துளனோ 
கொணர்ந்தொரு பொருள்என் கரங்கொளக் கொடுத்த 

குருஎனக் கூறல்என் குறிப்பே   
 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்