5361
அயலறியேன் நினதுமலர் அடிஅன்றிச் சிறிதும் 

அம்பலத்தே நிதம்புரியும் ஆனந்த நடங்கண் 
டுயலறியேன் எனினும்அது கண்டுகொளும் ஆசை 

ஒருகடலோ எழுகடலோ உரைக்கவொணா துடையேன் 
மயலறியா மனத்தமர்ந்த மாமணியே மருந்தே 

மதிமுடிஎம் பெருமான்நின் வாழ்த்தன்றி மற்றோர் 
செயலறியேன் எனக்கருளத் திருவுளஞ்செய் திடுவாய் 

திருஎழுத்தைந் தாணைஒரு துணைசிறிதிங் கிலனே   
5362
கொழுந்தேனும் செழும்பாகும் குலவுபசும் பாலும் 

கூட்டிஉண்டாற் போல்இனிக்குங் குணங்கொள்சடைக் கனியே 
தொழுந்தேவ மடந்தையர்க்கு மங்கலநாண் கழுத்தில் 

தோன்றவிடம் கழுத்தினுளே தோன்றநின்ற சுடரே 
எழுந்தேறும் அன்பருளத் தேற்றுதிரு விளக்கே 

என்உயிர்க்குத் துணையேஎன் இருகண்ணுள் மணியே 
அழுந்தேற அறியாதென் அவலநெஞ்சம் அந்தோ 

அபயம்உனக் கபயம்எனை ஆண்டருள்க விரைந்தே   
5363
என்னால்ஓர் துரும்பும்அசைத் தெடுக்கமுடி யாதே 

எல்லாஞ்செய் வல்லவன்என் றெல்லாரும் புகலும் 
நின்னால்இவ் வுலகிடைநான் வாழ்கின்றேன் அரசே 

நின்அருள்பெற் றழியாத நிலையைஅடைந் திடஎன் 
தன்னால்ஓர் சுதந்தரமும் இல்லைகண்டாய் நினது 

சகலசுதந் தரத்தைஎன்பால் தயவுசெயல் வேண்டும் 
பின்நாள்என் றிடில்சிறிதும் தரித்திருக்க மாட்டேன் 

பேராணை உரைத்தேன்என் பேராசை இதுவே   
5364
இச்சைஎலாம் புகன்றேன்என் இலச்சைஎலாம் விடுத்தேன் 

இனிச்சிறிதும் தரியேன்இங் கிதுதருணத் தடைந்தே 
அச்சைஎலாம் வெளிப்படுத்தி அச்சம்எலாம் அகற்றி 

அருட்சோதித் தனிஅரசே ஆங்காங்கும் ஓங்க 
விச்சைஎலாம் எனக்களித்தே அவிச்சைஎலாம் தவிர்த்து 

மெய்யுறஎன் னொடுகலந்து விளங்கிடுதல் வேண்டும் 
பச்சைஎலாம் செம்மைஎலாம் பொன்மைஎலாம் படர்ந்த 

படிகமணி விளக்கேஅம் பலம்விளங்கும் பதியே   
5365
தருவகைஇத் தருணம்நல்ல தருணம்இதில் எனக்கே 

தனித்தஅருட் பெருஞ்சோதி தந்தருள்க இதுதான் 
ஒருவகைஈ திலைஎனில்வே றொருவகைஎன் னுடைய 

உடல்உயிரை ஒழித்திடுக உவப்பினொடே இந்த 
இருவகையும் சம்மதமே திருவடிசாட் சியதாய் 

இயம்பினன்என் இதயம்உன்றன் இதயம்அறிந் ததுவே 
அருவகையோ உருவகையும் ஆகிஎன்னுள் அமர்ந்தாய் 

அம்மேஎன் அப்பாஎன் அய்யாஎன் அரசே