5366
வருமுன் வந்ததாக் கொள்ளுதல் எனக்கு 

வழக்கம் வள்ளல்நீ மகிழ்ந்தருட் சோதி 
தருமுன் தந்தனை என்றிருக் கின்றேன் 

தந்தை நீதரல் சத்தியம் என்றே 
குருமுன் பொய்யுரை கூறலேன் இனிஇக் 

குவலை யத்திடைக் கவலையைத் தரியேன் 
திருமுன் விண்ணப்பம் செய்தனன் கருணை 

செய்க வாழ்கநின் திருவருட் புகழே  
5367
வினைத்தடைதீர்த் தெனைஆண்ட மெய்யன்மணிப் பொதுவில் 

மெய்ஞ்ஞான நடம்புரிந்து விளங்குகின்ற விமலன் 
எனைத்தனிவைத் தருளொளிஈந் தென்னுள்இருக் கின்றான் 

எல்லாஞ்செய் வல்லசித்தன் இச்சையருட் சோதி 
தினைத்தனைபெற் றவரேனும் சாலுமுன்னே உலகில் 

செத்தவர்கள் எல்லாரும் திரும்பவரு கென்று 
நினைத்தவுடன் எதிர்வந்து நிற்பர்கண்டாய் எனது 

நெஞ்சேநீ அஞ்சேல்உள் அஞ்சேல்அஞ் சேலே  
 குறட்டாழிசை  
5368
அணியே எனதுமெய் யறிவே பொதுவளர் அரசே திருவளர் அமுதே 
இனிதருள் வாய்இது தருணம் அமுதரு ளாய்இது தருணம் 
மணியே எனதுகண் மணியே பொதுவளர் மதியே திருவருண் மதியே 
அருள்புரி வாய்இது தருணம் அருள்புரி வாய்இது தருணம்  
 நேரிசை வெண்பா  
5369
இதுவே தருணம் எனைஅணைதற் கிங்கே 
பொதுவே நடிக்கும் புனிதா - விதுவேய்ந்த 
சென்னியனே சுத்த சிவனே உனக்கடியேன் 
அன்னியனே அல்லேன் அறிந்து  
 கலித்துறை  
5370
ஆதி யேதிரு அம்பலத் தாடல்செய் அரசே 
நீதி யேஎலாம் வல்லவா நல்லவா நினைந்தே 
ஓதி யேஉணர் தற்கரி தாகிய ஒருவான் 
சோதி யேஎனைச் சோதியேல் சோதியேல் இனியே  
 கட்டளைக் கலித்துறை