5371
போதோ விடிந்த தருளரசேஎன் பொருட்டுவந்தென் 
தாதோர் எழுமையும் நன்மையுற் றோங்கத் தருவதுதான் 
மாதோட நீக்கும் கனிரச மோவந்த வான்கனியின் 
கோதோ அறிந்திலன் யாதோ திருவுளம் கூறுகவே    
5372
அப்பனை இப்பனை ஆக்கிச் சிவிகை அமர்ந்தவன்சொல் 
அப்பனை என்னுயிர்க் கானசெந் தேனை அமுதைஅந்நாள் 
அப்பனை ஆழி கடத்திக் கரைவிட் டளித்தசடை 
அப்பனைச் சிற்றம் பலவனை நான்துதித் தாடுவனே    
5373
மாதோர் புடைவைத்த மாமருந் தேமணி யேஎன் மட்டில் 
யாதோ திருவுளம் யானறி யேன்இதற் கென்னசெய்வேன் 
போதோ கழிகின்ற தந்தோநின் தன்னைப் பொருந்துகின்ற 
சூதோர் அணுவும் தெரியேன்நின் பாதத் துணைதுணையே    
 தரவு கொச்சகக் கலிப்பா   
5374
ஆர்ந்தஅருட் பெருஞ்சோதி அப்பாநான் அடுத்தவர்தம் 
சோர்ந்தமுகம் பார்க்கஇனித் துணியேன் நின்அருள்ஆணை 
நேர்ந்தவர்கள் நேர்ந்தபடி நெகிழ்ந்துரைக்கும் வார்த்தைகளும் 
ஓர்ந்துசெவி புகத்துணியேன் உன்ஆணை உன்ஆணை    
5375
அழியா நிலையாதது மேவிநின் அன்பினோடும் 
ஒழியா துனைப்பாடி நின்றாடி உலகினூடே 
வழியாம் உயிர்க்கின்பம் புரிந்து வயங்கல்வேண்டும் 
இழியா தருள்வாய் பொதுமேவிய எந்தைநீயே