5376
கரும்பசைக்கும் மொழிச்சிறியார் கல்மனத்தில் பயின்றுபயின் 
றிரும்பசைக்கும் மனம்பெற்றேன் யானோஇவ் வேழைகள்தம் 
அரும்பசிக்கு மருந்தளிப்பேன் அந்தோஇங் கென்னாலே 
துரும்பசைக்க முடியாதே சோதிநடப் பெருமானே   
 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்   
5377
மதிக்களவா மணிமன்றில் திருநடஞ்செய் 

திருத்தாளை வழுத்தல் இன்று 
பதிக்களவா நலந்தருவல் என்றுநினை 

ஏத்துதற்குப் பணிக்கின் றேன்நீ 
விதிக்களவாச் சித்திகள்முன் காட்டுகஇங் 

கென்கின்றாய் விரைந்த நெஞ்சே 
பொதிக்களவா முன்னர்இங்கே சத்தத்துக் 

களவென்பார் போன்றாய் அன்றே   
5378
ஆடியகால் மலர்களுக்கே அன்புடையார் 

யாவரிங்கே அவர்க்கே இன்பம் 
கூடியதென் றாரணமும் ஆகமமும் 

ஆணையிட்டுக் கூறும்வார்த்தை 
ஓடியதோ நெஞ்சேநீ உன்னுவதென் 

பற்பலவாய் உன்னேல் இன்னே 
பாடிஅவன் திருப்பாட்டைப் படிகண்டாய் 

இன்புகலப் படிகண் டாயே   
 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்   
5379
ஒன்றுமுன் எண்பால் எண்ணிடக் கிடைத்த 

வுவைக்குமேற் றனைஅருள் ஒளியால் 
நன்றுகண் டாங்கே அருட்பெருஞ் சோதி 

நாதனைக் கண்டவன் நடிக்கும் 
மன்றுகண் டதனில் சித்தெலாம் வல்ல 

மருந்துகண் டுற்றது வடிவாய் 
நின்றுகொண் டாடுந் தருணம்இங் கிதுவே 

நெஞ்சமே அஞ்சலை நீயே   
5380
கலைவளர் முடிய தென்னைஆட் கொண்ட 

கருணையங் கண்ணது ஞான 
நிலைவளர் பொருள துலகெலாம் போற்ற 

நின்றது நிறைபெருஞ் சோதி 
மலைவளர் கின்றது அருள்வெளி நடுவே 

வயங்குவ தின்பமே மயமாய்த் 
தலைவளர் திருச்சிற் றம்பலந் தனிலே 

தனித்தெனக் கினித்ததோர் கனியே