5386
வண்டணிபூங் குழல்அம்மை எங்கள்சிவ காம 

வல்லியொடு மணிமன்றில் வயங்கியநின் வடிவம் 
கண்டவரைக் கண்டவர்தம் கால்மலர்முத் தேவர் 

கனமுடிக்கே முடிக்கின்ற கடிமலராம் என்றால் 
பண்டகுநின் திருத்தொண்டர் அடிப்பெருமை எவரே 

பகர்ந்திடுவர் மறைகளெலாம் பகர்ந்திடுவான் புகுந்தே 
விண்டுலர்ந்து வெளுத்தஅவை வெளுத்தமட்டோ அவற்றை 

வியந்தோதும் வேதியரும் வெளுத்தனர்உள் உடம்பே   
5387
கிழக்குவெளுத் ததுகருணை அருட்சோதி உதயம் 

கிடைத்ததென துளக்கமலம் கிளர்ந்ததென தகத்தே 
சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரமா சாரம் 

சமயமதா சாரம்எனச் சண்டையிட்ட கலக 
வழக்குவெளுத் ததுபலவாம் பொய்ந்நூல்கற் றவர்தம் 

மனம்வெளுத்து வாய்வெளுத்து வாயுறவா தித்த 
முழக்குவெளுத் ததுசிவமே பொருள்எனும்சன் மார்க்க 

முழுநெறியில் பரநாத முரசுமுழங் கியதே   
 நிலைமண்டில ஆசிரியப்பா   
5388
சிற்சபைக் கண்ணும் பொற்சபைக் கண்ணும் 
திருநடம் புரியும் திருநட ராஜ 
எனக்கருள் புரிந்த நினக்கடி யேன்கைம் 
மாற்றை அறிந்திலன் போற்றிநின் அருளே   
5389
நாயினும் சிறியேன் ஆயினும் பெரியேன் 
யாதிற் பெரியேன் தீதிற் பெரியேன் 
என்னைஆண் டருளினை என்னைஆண் டவனே 
அம்பலத் தாடல்செய் எம்பெரும் பொருளே    
 நேரிசை வெண்பா   
5390
உண்மைஉரைத் தருள்என் றோதினேன் எந்தைபிரான் 
வண்மையுடன் என்அறிவில் வாய்ந்துரைத்தான் - திண்மையுறு 
சித்திநிலை எல்லாம் தெரிவித் தருள்கின்றேம் 
இத்தருணம் சத்தியமே என்று