5391
உலகமெலாம் போற்ற ஒளிவடிவ னாகி 
இலகஅருள் செய்தான் இசைந்தே - திலகன்என 
நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான் 
தானே எனக்குத் தனித்து   
5392
தனித்துணையாய் என்றன்னைத் தாங்கிக்கொண் டென்றன் 
மனித்த உடம்பழியா வாறே - கனித்துணையாம் 
இன்னமுதம் தந்தெனக்கே எல்லாமும் வல்லசித்தி 
தன்னையுந்தந் துட்கலந்தான் றான்   
5393
சர்க்கரைஒத் தான்எனக்கே தந்தான் அருளென்மனக் 
கற்கரையச் செய்தே களிப்பித்தான் - கற்க 
இனியான் அருட்சோதி எந்தைஎன்னுள் உற்றான் 
இனியான் மயங்கேன் இருந்து   
5394
உன்னைவிட மாட்டேன்நான் உன்ஆணை எம்பெருமான் 
என்னைவிட மாட்டாய் இருவருமாய் - மன்னிஎன்றும் 
வண்மை எலாம்வல்ல வாய்மைஅரு ளால்உலகுக் 
குண்மைஇன்பம் செய்தும் உவந்து   
 கட்டளைக் கலித்துறை  
5395
நஞ்சுண் டுயிர்களைக் காத்தவ னேநட நாயகனே 
பஞ்சுண்ட சிற்றடிப் பாவைபங் காநம் பராபரனே 
மஞ்சுண்ட செஞ்சடை மன்னாபொன் அம்பல வாவலவா 
பிஞ்சுண்ட வாய்க்குப் பழம்அளித் தாண்ட பெரியவனே