5396
அப்பூறு செஞ்சடை அப்பாசிற் றம்பலத் தாடுகின்றோய் 
துப்பூறு வண்ணச் செழுஞ்சுட ரேதனிச் சோதியனே 
வெப்பூறு நீக்கிய வெண்ணீறு பூத்தபொன் மேனியனே 
உப்பூறு வாய்க்குத்தித் திப்பூறு காட்டிய உத்தமனே   
5397
நான்செய்த புண்ணியம் என்னுரைக் கேன்பொது நண்ணியதோர் 
வான்செய்த மாமணி என்கையில் பெற்றுநல் வாழ்வடைந்தேன் 
ஊன்செய்த தேகம் ஒளிவடி வாகநின் றோங்குகின்றேன் 
கோன்செய்த விச்சை குணிக்கவல் லார்எவர் கூறுமினே   
5398
பண்ணிய பூசை நிறைந்தது சிற்றம் பலநடங்கண் 
டெண்ணிய எண்ணம் பலித்தன மெய்இன்பம் எய்தியதோர் 
தண்ணியல் ஆரமு துண்டனன் கண்டனன் சாமியைநான் 
நண்ணிய புண்ணியம் என்னுரைக் கேன்இந்த நானிலத்தே   
5399
அருட்பெருஞ் சோதிஎன் அம்மையி னோடறி வானந்தமாம் 
அருட்பெருஞ் சோதிஎன் அப்பன்என் உள்ளத் தமர்ந்தன்பினால் 
அருட்பெருஞ் சோதித்தௌ; ளாரமு தம்தந் தழிவற்றதோர் 
அருட்பெருஞ் சோதிச்செங் கோலும் கொடுத்தனன் அற்புதமே   
 கலிவிருத்தம்  
5400
அருட்பெருஞ் சோதிஎன் அகத்தில் ஓங்கின 
மருட்பெரும் திரைஎலாம் மடிந்து நீங்கின 
இருட்பெரு மலமுதல் யாவும் தீர்ந்தன 
தெருட்பெரும் சித்திகள் சேர்ந்த என்னையே