5406
என்னுடைய விண்ணப்பம் இதுகேட்க எம்பெருமான் 
நின்னுடைய பெருங்கருணை நிதிஉடையேன் ஆதலினால் 
பொன்னுடையான் அயன்முதலாம் புங்கவரை வியவேன்என் 
தன்னுடைய செயலெல்லாம் தம்பிரான் செயலன்றே   
5407
ஓங்கும்அன்பர் எல்லாரும் உள்ளே விழித்துநிற்கத் 
தூங்கிய என்தன்னை எழுப்பிஅருள் தூயபொருள் 
வாங்குகஎன் றென்பால் வலியக் கொடுத்தமுதும் 
பாங்குறநின் றூட்டினையே எந்தாய்நின் பண்பிதுவே   
5408
நாட்பாரில் அன்பரெலாம் நல்குகஎன் றேத்திநிற்ப 
ஆட்பாரில் அன்போர் அணுத்துணையும் இல்லேற்கே 
நீட்பாய் அருளமுதம் நீகொடுத்தாய் நின்னை இங்கே 
கேட்பார் இலைஎன்று கீழ்மேல தாக்கினையே   
5409
எல்லார்க்கும் கடையாகி இருந்தேனுக் கருள்புரிந்தே 
எல்லார்க்கும் துணையாகி இருக்கவைத்தாய் எம்பெருமான் 
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்றாய் இவ்வண்ணம் 
எல்லார்க்கும் செய்யாமை யாதுகுறித் திசைஎனக்கே   
5410
நான்ஆனான் தான்ஆனான் நானும்தா னும்ஆனான் 
தேன்ஆனான் தௌ;ளமுதாய்த் தித்தித்து நிற்கின்றான் 
வான்ஆனான் ஞான மணிமன்றில் ஆடுகின்றான் 
கோன்ஆனான் என்னுட் குலாவுகின்ற கோமானே   
 கட்டளைக் கலித்துறை