5411
எல்லாக் குறையும் தவிர்ந்தேன்உன் இன்னருள் எய்தினன்நான் 
வல்லாரின் வல்லவன் ஆனேன் கருணை மருந்தருந்தி 
நல்லார் எவர்க்கும் உபகரிப் பான்இங்கு நண்ணுகின்றேன் 
கொல்லா விரதத்தில் என்னைக் குறிக்கொண்ட கோலத்தனே   
5412
முன்னாள்செய் புண்ணியம் யாதோ உலகம் முழுதும்என்பால் 
இந்நாள் அடைந்தின்பம் எய்திட ஓங்கினன் எண்ணியவா 
றெந்நாளும் இவ்வுடம் பேஇற வாத இயற்கைபெற்றேன் 
என்னாசை அப்பனைக் கண்டுகொண் டேன்என் இதயத்திலே   
5413
கண்டேன் சிற்றம்பலத் தானந்த நாடகம் கண்டுகளி 
கொண்டேன் எல்லாம்வல்ல சித்தனைக் கூடிக் குலவிஅமு 
துண்டேன் மெய்ஞ்ஞான உருஅடைந் தேன்பொய் உலகொழுக்கம் 
விண்டேன் சமரச சன்மார்க்கம் பெற்ற வியப்பிதுவே   
5414
கண்கொண்ட பூதலம் எல்லாம்சன் மார்க்கம் கலந்துகொண்டே 
பண்கொண்ட பாடலில் பாடிப் படித்துப் பரவுகின்றார் 
விண்கொண்ட சிற்சபை ஒன்றே நிறைந்து விளங்குகின்ற 
தெண்கொண்ட மற்றை மதமார்க்கம் யாவும் இறந்தனவே   
5415
தாழைப் பழம்பிழி() பாலொடு சர்க்கரைச் சாறளிந்த 
வாழைப் பழம்பசு நெய்நறுந் தேனும் மருவச்செய்து 
மாழைப் பலாச்சுளை மாம்பழம் ஆதி வடித்தளவி 
ஏழைக் களித்தனை யேஅரு ளாரமு தென்றொன்றையே   
 () தாழைப்பழம் - தேங்காய்