5416
தென்பால் முகங்கொண்ட தேவேசெந் தேனில் சிறந்தபசு 
வின்பால் கலந்தளி முக்கனிச் சாறும் எடுத்தளவி 
அன்பால் மகிழ்ந்து மகனே வருகென் றழைத்தருளி 
என்பால் அளித்தனை யேஅரு ளாரமு தென்றொன்றையே   
5417
செத்தார் எழுந்தனர் சுத்தசன் மார்க்கம் சிறந்ததுநான் 
ஒத்தார் உயர்ந்தவர் இல்லா ஒருவனை உற்றடைந்தே 
சித்தாடு கின்றனன் சாகா வரமும் சிறக்கப்பெற்றேன் 
இத்தா ரணியில் எனக்கிணை யார்என் றியம்புவனே   
 கலிநிலைத்துறை   
5418
கருணை யாம்பெருங் கடல்அமு தளித்தனை எனக்கே 
தருண வாரிச மலர்ப்பதம் தந்தனை நின்னை 
அருண வண்ணஒண் சுடர்மணி மண்டபத் தடியேன் 
பொருள்ந யப்புறக் கண்டுகண் டுளமகிழ் போதே   
 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்   
5419
முந்தைநாள் அயர்ந்தேன் அயர்ந்திடேல் எனஎன் 

முன்னர்நீ தோன்றினை அந்தோ 
அந்தநாள் தொடங்கி மகிழ்ந்திருக் கின்றேன் 

அப்பனே அய்யனே அரசே 
இந்தநாள் கவலை இடர்பயம் எல்லாம் 

என்னைவிட் டொழிந்திடப் புரிந்தாய் 
எந்தநாள் புரிந்தேன் இப்பெரும் பேறிங் 

கெய்துதற் குரியமெய்த் தவமே   
5420
வாய்க்குறும் புரைத்துத் திரிந்துவீண் கழித்து 

மலத்திலே கிடந்துழைத் திட்ட 
நாய்க்குயர் தவிசிட் டொருமணி முடியும் 

நன்றுறச் சூட்டினை அந்தோ 
தூய்க்குணத் தவர்கள் புகழ்மணி மன்றில் 

சோதியே நின்பெருந் தயவைத் 
தாய்க்குறு தயவென் றெண்ணுகோ தாயின் 

தயவும்உன் தனிப்பெருந் தயவே