5421
பேரிடர் தவிர்த்துப் பேரருள் புரிந்த 

பெருமநின் தன்னைஎன் றனக்கே 
சாருறு தாயே என்றுரைப் பேனோ 

தந்தையே என்றுரைப் பேனோ 
சீருறு குருவே என்றுரைப் பேனோ 

தெய்வமே என்றுரைப் பேனோ 
யாரென உரைப்பேன் என்னெனப் புகழ்வேன் 

யாதுமொன் றறிந்திலேன் அந்தோ   
5422
சிறுநெறிக் கெனைத்தான் இழுத்ததோர் கொடிய 

தீமன மாயையைக் கணத்தே 
வெறுவிய தாக்கித் தடுத்தெனை ஆண்ட 

மெய்யநின் கருணைஎன் புகல்வேன் 
உறுநறுந் தேனும் அமுதும்மென் கரும்பில் 

உற்றசா றட்டசர்க் கரையும் 
நறுநெயுங் கலந்த சுவைப்பெரும் பழமே 

ஞானமன் றோங்கும்என் நட்பே   
5423
புல்லிய நெறிக்கே இழுத்தெனை அலைத்த 

பொய்ம்மன மாயையைக் கணத்தே 
மெல்லிய தாக்கித் தடுத்தெனை ஆண்ட 

மெய்யநின் கருணைஎன் புகல்வேன் 
வல்லிநின் அம்மை மகிழமன் றோங்கும் 

வள்ளலே மறைகள்ஆ கமங்கள் 
சொல்லிய பதியே மிகுதயா நிதியே 

தொண்டனேன் உயிர்க்குமெய்த் துணையே   
5424
அருந்தவர் காண்டற் கரும்பெருங்கருணை 

அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே 
இருந்தனன் அம்மா நான்செய்த தவந்தான் 

என்னையோ என்னையோ என்றாள் 
திருந்துதௌ; ளமுதுண் டழிவெலாந் தவிர்த்த 

திருவுரு அடைந்தனன் ஞான 
மருந்துமா மணியும் மந்திர நிறைவும் 

வாய்த்தன வாய்ப்பின்என் றாளே   
5425
இன்பிலே வயங்கும் சிவபரம் பொருளே 

என்உயிர்க் கமுதமே என்தன் 
அன்பிலே பழுத்த தனிப்பெரும் பழமே 

அருள்நடம் புரியும்என் அரசே 
வன்பிலே விளைந்த மாயையும் வினையும் 

மடிந்தன விடிந்ததால் இரவும் 
துன்பிலேன் இனிநான் அருட்பெருஞ் சோதிச் 

சூழலில் துலங்குகின் றேனே