5426
உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும் 

ஒருதிருப் பொதுஎன அறிந்தேன் 
செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன் 

சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன் 
மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து 

மலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப் 
பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப் 

பாடுகின் றேன்பொதுப் பாட்டே   
5427
படித்தஎன் படிப்பும் கேள்வியும் இவற்றின் 

பயனதாம் உணர்ச்சியும் அடியேன் 
பிடித்தநல் நிலையும் உயிரும்மெய் இன்பும் 

பெருமையும் சிறப்பும்நான் உண்ணும் 
வடித்ததௌ; ளமுதும் வயங்குமெய் வாழ்வும் 

வாழ்க்கைநன் முதலும்மன் றகத்தே 
நடித்தபொன் னடியும் திருச்சிற்றம் பலத்தே 

நண்ணிய பொருளும்என் றறிந்தேன்   
5428
கலையனே எல்லாம் வல்லஓர் தலைமைக் 

கடவுளே என்இரு கண்ணே 
நிலையனே ஞான நீதிமன் றிடத்தே 

நிருத்தஞ்செய் கருணைமா நிதியே 
புலையனேன் பொருட்டுன் திருவடி அவனி 

பொருந்திய புதுமைஎன் புகல்வேன் 
சிலையைநேர் மனத்தேன் செய்தவம் பெரிதோ 

திருவருட் பெருந்திறல் பெரிதே   
5429
தரம்பிறர் அறியாத் தலைவஓர் முக்கண் 

தனிமுதல் பேரருட் சோதிப் 
பரம்பர ஞான சிதம்பர நடஞ்செய் 

பராபர நிராமய நிமல 
உரம்பெறும் அயன்மால் முதற்பெருந் தேவர் 

உளத்ததி சயித்திட எனக்கே 
வரந்தரு கின்றாய் வள்ளல்நின் கருணை 

மாகடற் கெல்லைகண் டிலனே   
5430
யான்முனம் புரிந்த பெருந்தவம் யாதோ 

என்சொல்வேன் என்சொல்வேன் அந்தோ 
ஊன்மனம் உருக என்தனைத் தேற்றி 

ஒளிஉருக் காட்டிய தலைவா 
ஏன்மனம் இரங்காய் இன்றுநீ என்றேன் 

என்றசொல் ஒலிஅடங் குதன்முன் 
ஆன்மகிழ் கன்றின் அணைத்தெனை எடுத்தாய் 

அருட்பெருஞ் சோதிஎன் அரசே