5431
பனிப்பறுத் தெல்லாம் வல்லசித் தாக்கிப் 

பரம்பரம் தருகின்ற தென்றோர் 
தனிப்பழம் எனக்கே தந்தைதான் தந்தான் 

தமியனேன் உண்டனன் அதன்தன் 
இனிப்பைநான் என்என் றியம்புவேன் அந்தோ 

என்னுயிர் இனித்ததென் கரணம் 
சனிப்பற இனித்த தத்துவம் எல்லாம் 

தனித்தனி இனித்தன தழைத்தே   
5432
விண்ணெலாம் கலந்த வெளியில்ஆ னந்தம் 

விளைந்தது விளைந்தது மனனே 
கண்ணெலாம் களிக்கக் காணலாம் 

பொதுவில் கடவுளே என்றுநம் கருத்தில் 
எண்ணலாம் எண்ணி எழுதலாம் எழுதி 

ஏத்தலாம் எடுத்தெடுத் துவந்தே 
உண்ணலாம் விழைந்தார்க் குதவலாம் உலகில் 

ஓங்கலாம் ஓங்கலாம் இனியே   
5433
வள்ளலாம் கருணை மன்றிலே அமுத 

வாரியைக் கண்டனம் மனமே 
அள்ளலாம் எடுத்துக் கொள்ளலாம் பாடி 

ஆடலாம் அடிக்கடி வியந்தே 
உள்எலாம் நிரம்ப உண்ணலாம் உலகில் 

ஓங்கலாம் உதவலாம் உறலாம் 
கள்எலாம் உண்ட வண்டென இன்பம் 

காணலாம் களிக்கலாம் இனியே   
5434
சனிதொ லைந்தது தடைத விர்ந்தது 

தயைமி குந்தது சலமொடே 
துனிதொ லைந்தது சுமைத விர்ந்தது 

சுபமி குந்தது சுகமொடே 
கனிஎ திர்ந்தது களைத விர்ந்தது 

களிமி குந்தது கனிவொடே 
புனித மன்றிறை நடம லிந்தது 

புகழ்உ யர்ந்தது புவியிலே   
5435
,  உரையும் உற்றது ஒளியும் உற்றது 

உணர்வும் உற்றது உண்மையே 
பரையும் உற்றது பதியும் உற்றது 

பதமும் உற்றது பற்றியே 
புரையும் அற்றது குறையும் அற்றது 

புலையும் அற்றது புன்மைசேர் 
திரையும் அற்றது நரையும் அற்றது 

திரையும் அற்றுவி ழுந்ததே   
 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்