5436
அம்பலத்தே ஆடுகின்ற ஆரமுதே அரசே 

ஆனந்த மாகடலே அறிவேஎன் அன்பே 
உம்பர்கட்கே அன்றிஇந்த உலகர்கட்கும் அருள்வான் 

ஒளிர்கின்ற ஒளியேமெய் உணர்ந்தோர்தம் உறவே 
எம்பலத்தே வாகிஎனக் கெழுமையும்நற் றுணையாய் 

என்உளத்தே விளங்குகின்ற என்இறையே நினது 
செம்பதத்தே மலர்விளங்கக் கண்டுகொண்டேன் எனது 

சிறுமைஎலாம் தீர்ந்தேமெய்ச் செல்வமடைந் தேனே   
5437
அடிவிளங்கக் கனகசபைத் தனிநடனம் புரியும் 

அருட்சுடரே என்உயிருக் கானபெருந் துணையே 
துடிவிளங்கக் கரத்தேத்தும் சோதிமலை மருந்தே 

சொற்பதம்எல் லாம்கடந்த சிற்சொருபப் பொருளே 
பொடிவிளங்கத் திருமேனிப் புண்ணியனே ஞானப் 

போனகரைச் சிவிகையின்மேல் பொருந்தவைத்த புனிதா 
படிவிளங்கச் சிறியேன்நின் பதமலர்கண் டுவந்தேன் 

பரிவொழிந்தேன் அருட்செல்வம் பரிசெனப்பெற் றேனே   
5438
அன்புடை யவரேஎல் லாம்உடை யவரே 

அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேஎன் 
வன்புடை மனத்தைநன் மனமாக்கி எனது 

வசஞ்செய்வித் தருளிய மணிமன்றத் தவரே 
இன்புடை யவரேஎன் இறையவ ரேஎன் 

இருகணுள் மணிகளுள் இசைந்திருந் தவரே 
என்புடை எனைத்தூக்கி எடுத்தீர்இங் கிதனை 

எண்ணுகின் றேன்அமு துண்ணுகின் றேனே   
5439
கலக்கம் நீங்கினேன் களிப்புறு கின்றேன் 

கனக அம்பலம் கனிந்தசெங் கனியே 
துலக்கம் உற்றசிற் றம்பலத் தமுதே 

தூய சோதியே சுகப்பெரு வாழ்வே 
விலக்கல் இல்லதோர் தனிமுதல் அரசே 

வேத ஆகமம் விளம்புமெய்ப் பொருளே 
அலக்கண் அற்றமெய் அன்பர்தம் உளத்தே 

அமர்ந்த தோர்சச்சி தானந்த சிவமே   
5440
ஓங்கார அணைமீது நான்இருந்த தருணம் 

உவந்தெனது மணவாளர் சிவந்தவடி வகன்றே 
ஈங்காரப் பளிக்குவடி வெடுத்தெதிரே நின்றார் 

இருந்தருள்க எனஎழுந்தேன் எழுந்திருப்ப தென்நீ 
ஆங்காரம் ஒழிஎன்றார் ஒழிந்திருந்தேன் அப்போ 

தவர்நானோ நான்அவரோ அறிந்திலன்முன் குறிப்பை 
ஊங்கார இரண்டுருவும் ஒன்றானோம் அங்கே 

உறைந்தஅனு பவம்தோழி நிறைந்தபெரு வெளியே