5441
சொல்லுகின்றேன் பற்பலநான் சொல்லுகின்ற வெல்லாம் 

துரிசலவே சூதலவே தூய்மையுடை யனவே 
வெல்லுகின்ற வார்த்தைஅன்றி வெறும்வார்த்தை என்வாய் 

விளம்பாதென் ஐயர்நின்று விளம்புகின்ற படியால் 
செல்லுகின்ற படியேநீ காண்பாய்இத் தினத்தே 

தேமொழிஅப் போதெனைநீ தெளிந்துகொள்வாய் கண்டாய் 
ஒல்லுகின்ற வகைஎல்லாம் சொல்லுகின்றேன் அடிநான் 

உண்மைஇது உண்மைஇது உண்மைஇது தானே   
5442
தந்தை தன்மையே தனையன்தன் தன்மை 

என்று சாற்றுதல் சத்தியம் கண்டீர் 
எந்தை எம்பிரான் ஐந்தொழில் புரியும் 

இறைவன் மன்றுளே இயல்நடம் புரிவான் 
மைந்தன் என்றெனை ஆண்டவன் எல்லாம் 

வல்ல நாயகன் நல்லசீர் உடையான் 
அந்த ணாளன்மெய் அறிவுடை யவன்என் 

அப்பன் தன்மைஎன் தன்மைஎன் றறிமின்   
 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்   
5443
என்உடலும் என்உயிரும் என்பொருளும் 

நின்னஎன இசைந்தஞ் ஞான்றே 
உன்னிடைநான் கொடுத்தனன்மற் றென்னிடைவே 

றொன்றும்இலை உடையாய் இங்கே 
புன்னிகரேன் குற்றமெலாம் பொறுத்ததுவும் 

போதாமல் புணர்ந்து கொண்டே 
தன்னிகர்என் றெனவைத்தாய் இஞ்ஞான்றென் 

கொடுப்பேன்நின் தன்மைக் கந்தோ   
5444
என்னுரைக்கேன் என்னுரைக்கேன் இந்தஅதி 

சயந்தன்னை எம்ம னோர்காள் 
பொன்னுரைக்கும் மணிமன்றில் திருநடனம் 

புரிகின்ற புனிதன் என்னுள் 
மின்உரைக்கும் படிகலந்தான் பிரியாமல் 

விளங்குகின்றான் மெய்ம்மை யான 
தன்னுரைக்கும் என்னுரைக்கும் சமரசம்செய் 

தருள்கின்றான் சகத்தின் மீதே   
5445
ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன் 

மாளாத ஆக்கை பெற்றேன் 
கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே 

நடுவிருந்து குலாவு கின்றேன் 
பாடுகின்றேன் எந்தைபிரான் பதப்புகழை 

அன்பினொடும் பாடிப் பாடி 
நீடுகின்றேன் இன்பக்கூத் தாடுகின்றேன் 

எண்ணமெலாம் நிரம்பி னேனே