5446
ஆணை ஆணைநீ அஞ்சலை அஞ்சலை 

அருள்ஒளி தருகின்றாம் 
கோணை மாநிலத் தவரெலாம் நின்னையே 

குறிக்கொள்வர் நினக்கேஎம் 
ஆணை அம்பலத் தரசையும் அளித்தனம் 

வாழ்கநீ மகனேஎன் 
றேணை பெற்றிட எனக்கருள் புரிந்தநின் 

இணைமலர்ப் பதம்போற்றி   
 கட்டளைக் கலிப்பா   
5447
நாய்க்கும் ஓர்தவி சிட்டுப்பொன் மாமுடி 

நன்று சூட்டினை என்றுநின் அன்பர்கள் 
வாய்க்கு வந்த படிபல பேசவே 

மதியி லேனையும் மன்னருட் சத்தியாம் 
தாய்க்குக் காட்டிநல் தண்ணமு தூட்டிஓர் 

தவள மாடப்பொன் மண்டபத் தேற்றியே 
சேய்க்கு நேரஎன் கையில்பொற் கங்கணம் 

திகழக் கட்டினை என்னைநின் செய்கையே   
 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்   
5448
தன்னைவிடத் தலைமைஒரு தகவினும்இங் கியலாத் 

தனித்தலைமைப் பெரும்பதியே தருணதயா நிதியே 
பொன்னடிஎன் சிரத்திருக்கப் புரிந்தபரம் பொருளே 

புத்தமுதம் எனக்களித்த புண்ணியனே நீதான் 
என்னைவிட மாட்டாய்நான் உன்னைவிட மாட்டேன் 

இருவரும்ஒன் றாகிஇங்கே இருக்கின்றோம் இதுதான் 
நின்னருளே அறிந்ததெனில் செயுஞ்செய்கை அனைத்தும் 

நின்செயலோ என்செயலோ நிகழ்த்திடுக நீயே   
5449
கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில் 

கதவுதிறந் திடப்பெற்றேன் காட்சியெலாம் கண்டேன் 
அடர்கடந்த திருஅமுதுண் டருள்ஒளியால் அனைத்தும் 

அறிந்துதெளிந் தறிவுருவாய் அழியாமை அடைந்தேன் 
உடல்குளிர்ந்தேன் உயிர்கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன் 

உள்ளபடி உள்ளபொருள் உள்ளனவாய் நிறைந்தேன் 
இடர்தவிர்க்கும் சித்திஎலாம் என்வசம்ஓங் கினவே 

இத்தனையும் பொதுநடஞ்செய் இறைவன்அருட் செயலே   
5450
காற்றாலே புவியாலே ககனமத னாலே 

கனலாலே புனலாலே கதிராதி யாலே 
கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே 

கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே 
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் 

மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே 
ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர் 

எந்தைஅருட் பெருஞ்ஸோதி இறைவனைச்சார் வீரே