5451
எல்லா உலகமும் என்வசம் ஆயின 

எல்லா உயிர்களும் என்உயிர் ஆயின 
எல்லா ஞானமும் என்ஞானம் ஆயின 

எல்லா வித்தையும் என்வித்தை ஆயின 
எல்லா போகமும் என்போகம் ஆயின 

எல்லாஇன்பமும் என்இன்பம் ஆயின 
எல்லாம் வல்லசிற் றம்பலத் தென்னப்பர் 

எல்லாம் நல்கிஎன் உள்ளத்துள் ளாரே   
5452
சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது 

தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர் 
என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர் 

எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர் 
புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே 

புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த் 
தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே 

தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே   
 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்   
5453
ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா 

அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே 
நீதியில் கலந்து நிறைந்தது நானும் 

நித்தியன் ஆயினேன் உலகீர் 
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே 

சத்தியச் சுத்தசன் மார்க்க 
வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை 

விளம்பினேன் வம்மினோ விரைந்தே   
5454
வாது பேசிய மனிதர் காள்ஒரு 

வார்த்தை கேண்மீன்கள் வந்துநும் 
போது போவதன் முன்ன ரேஅருட் 

பொதுவி லேநடம் போற்றுவீர் 
தீது பேசினீர் என்றி டாதுமைத் 

திருவு ளங்கொளும் காண்மினோ 
சூது பேசிலன் நன்மை சொல்கின்றேன் 

சுற்றம் என்பது பற்றியே   
5455
தூக்கமும் துயரும் அச்சமும் இடரும் 

தொலைந்தன தொலைந்தன எனைவிட் 
டேக்கமும் வினையும் மாயையும் இருளும் 

இரிந்தன ஒழிந்தன முழுதும் 
ஆக்கமும் அருளும் அறிவும்மெய் அன்பும் 

அழிவுறா உடம்பும்மெய் இன்ப 
ஊக்கமும் எனையே உற்றன உலகீர் 

உண்மைஇவ் வாசகம் உணர்மின்   
 கலிப்பா