5461
நாடாக் கொடிய மனம்அடக்கி 

நல்ல மனத்தைக் கனிவித்துப் 
பாடாப் பிழையைப் பொறுத்தெனக்கும் 

பதம்ஈந் தாண்ட பதிக்கொடியே 
தேடாக் கரும சித்திஎலாம் 

திகழத் தயவால் தெரிவித்த 
கோடாக் கொடியே சிவதருமக் 

கொடியே அடியேற் கருளுகவே   
5462
மணங்கொள் கொடிப்பூ முதல்நான்கு 

வகைப்பூ வடிவுள் வயங்குகின்ற 
வணங்கொள் கொடியே ஐம்பூவும் 

மலிய மலர்ந்த வான்கொடியே 
கணங்கொள் யோக சித்திஎலாம் 

காட்டுங் கொடியே கலங்காத 
குணங்கொள் கொடியே சிவபோகக் 

கொடியே அடியேற் கருளுகவே   
5463
புலங்கொள் கொடிய மனம்போன 

போக்கில் போகா தெனைமீட்டு 
நலங்கொள் கருணைச் சன்மார்க்க 

நாட்டில் விடுத்த நற்கொடியே 
வலங்கொள் ஞான சித்திஎலாம் 

வயங்க விளங்கு மணிமன்றில் 
குலங்கொள் கொடியே மெய்ஞ்ஞானக் 

கொடியே அடியேற் கருளுகவே   
5464
வெறிக்கும் சமயக் குழியில்விழ 

விரைந்தேன் தன்னை விழாதவகை 
மறிக்கும் ஒருபே ரறிவளித்த 

வள்ளற் கொடியே மனக்கொடியைச் 
செறிக்கும் பெரியர் உளத்தோங்கும் 

தெய்வக் கொடியே சிவஞானம் 
குறிக்கும் கொடியே ஆனந்தக் 

கொடியே அடியேற் கருளுகவே   
5465
கடுத்த விடர்வன் பயம்கவலை 

எல்லாம் தவிர்த்துக் கருத்துள்ளே 
அடுத்த கொடியே அருளமுதம் 

அளித்தென் தனைமெய் அருட்கரத்தால் 
எடுத்த கொடியே சித்திஎலாம் 

இந்தா மகனே என்றெனக்கே 
கொடுத்த கொடியே ஆனந்தக் 

கொடியே அடியேற் கருளுகவே