5471
நண்புடையாய் என்னுடைய நாயகனே எனது 

நல்உறவே சிற்சபையில் நடம்புரியும் தலைவா 
எண்புடையா மறைமுடிக்கும் எட்டாநின் புகழை 

யாதறிவேன் பாடுகஎன் றெனக்கேவல் இட்டாய் 
பண்புடைநின் மெய்யன்பர் பாடியபே ரன்பில் 

பழுத்தபழம் பாட்டில்ஒரு பாட்டும்அறி யேனே 
தண்புடைநன் மொழித்திரளும்() சுவைப்பொருளும் அவைக்கே 

தக்கஇயல் இலக்கியமும் தந்தருள்வாய் எனக்கே   
 () மொழித்திறனும் - முதற்பதிப்பு, பொ சு, ச மு க   
5472
பணிந்தடங்கும் மனத்தவர்பால் பரிந்தமரும் பதியே 

பாடுகின்றோர் உள்ளகத்தே கூடுகின்ற குருவே 
கணிந்தமறை பலகோடி ஆகமம்பல் கோடி 

கடவுள்நின தருட்புகழைக் கணிப்பதற்குப் பலகால் 
துணிந்துதுணிந் தெழுந்தெழுந்து தொடர்ந்துதொடர்ந் தடிகள் 

சுமந்துசுமந் திளைத்திளைத்துச் சொல்லியவல் லனவென் 
றணிந்தமொழி மாற்றிவலி தணிந்தஎன்றால் அந்தோ 

அடியேன்நின் புகழ்உரைக்கல் ஆவதுவோ அறிந்தே   
5473
விதிப்பவர்கள் பலகோடி திதிப்பவர்பல் கோடி 

மேலவர்கள் ஒருகோடி விரைந்துவிரைந் துனையே 
மதிப்பவர்கள் ஆகிஅவர் மதியாலே பலகால் 

மதித்துமதித் தவர்மதிபெண் மதியாகி அலந்தே 
துதிப்பதுவே நலம்எனக்கொண் டிற்றைவரை ஏற்ற 

சொற்பொருள்கள் காணாதே சுழல்கின்றார் என்றால் 
குதிப்பொழியா மனச்சிறிய குரங்கொடுழல் கின்றேன் 

குறித்துரைப்பேன் என்னஉளம் கூசுகின்ற தரசே   
5474
ஒளியாகி உள்ஒளியாய் உள்ஒளிக்குள் ஒளியாய் 

ஒளிஒளியின் ஒளியாய்அவ் ஒளிக்குளும்ஓர் ஒளியாய் 
வெளியாகி வெளிவெளியாய் வெளியிடைமேல் வெளியாய் 

மேல்வெளிமேல் பெருவெளியாய்ப் பெருவெளிக்கோர் வெளியாய் 
அளியாகி அதுஆகி அதுவும்அல்லா தாகி 

அப்பாலாய் அப்பாலும் அல்லதுவாய் நிறைவாம் 
தளியாகி எல்லாமாய் விளங்குகின்ற ஞான 

சபைத்தலைவா நின்இயலைச் சாற்றுவதெவ் வணமே   
5475
வாக்கொழிந்து மனம்ஒழிந்து மதிஒழிந்து மதியின் 

வாதனையும் ஒழிந்தறிவாய் வயங்கிநின்ற இடத்தும் 
போக்கொழிந்தும் வரவொழிந்தும் பூரணமாய் அதுவும் 

போனபொழு துள்ளபடி புகலுவதெப் படியோ 
நீக்கொழிந்த நிறைவேமெய்ந் நிலையேஎன் னுடைய 

நேயமே ஆனந்த நிருத்தமிடும் பதியே 
ஏக்கொழிந்தார் உளத்திருக்கும் இறையேஎன் குருவே 

எல்லாமாய் அல்லதுமாய் இலங்கியமெய்ப் பொருளே