5481
ஒழித்தேன் அவலம் அச்சம்எலாம் 

ஓடத் துறந்தேன் உறுகண்எலாம் 
கழித்தேன் மரணக் களைப்பற்றேன் 

களித்தேன் பிறவிக் கடல்கடந்தேன் 
பழித்தேன் சிற்றம் பலம்என்னாப் 

பாட்டை மறந்தேன் பரம்பரத்தே 
விழித்தேன் கருத்தின் படிஎல்லாம் 

விளையா டுதற்கு விரைந்தேனே   
5482
விரைந்து விரைந்து படிகடந்தேன் 

மேற்பால் அமுதம் வியந்துண்டேன் 
கரைந்து கரைந்து மனம்உருகக் 

கண்ணீர் பெருகக் கருத்தலர்ந்தே 
வரைந்து ஞான மணம்பொங்க 

மணிமன் றரசைக் கண்டுகொண்டேன் 
திரைந்து நெகிழ்ந்த தோலுடம்பும் 

செழும்பொன் உடம்பாய்த் திகழ்ந்தேனே   
5483
தேனே கன்னல் செழும்பாகே 

என்ன மிகவும் தித்தித்தென் 
ஊனே புகுந்தென் உளத்தில்அமர்ந் 

துயிரில் கலந்த ஒருபொருளை 
வானே நிறைந்த பெருங்கருணை 

வாழ்வை மணிமன் றுடையானை 
நானே பாடிக் களிக்கின்றேன் 

நாட்டார் வாழ்த்த நானிலத்தே   
5484
நிலத்தே அடைந்த இடர்அனைத்தும் 

நிமிடத் தொழித்தே நிலைபெற்றேன் 
வலத்தே அழியா வரம்பெற்றேன் 

மணிமன் றேத்தும் வாழ்வடைந்தேன் 
குலத்தே சமயக் குழியிடத்தே 
விழுந்திவ் வுலகம் குமையாதே 
நலத்தே சுத்த சன்மார்க்கம் 
நாட்டா நின்றேன் நாட்டகத்தே   
5485
அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் 

திருந்த உலகர் அனைவரையும் 
சகத்தே திருத்திச் சன்மார்க்க 

சங்கத் தடைவித் திடஅவரும் 
இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் 

திடுதற் கென்றே எனைஇந்த 
உகத்தே இறைவன் வருவிக்க 

உற்றேன் அருளைப் பெற்றேனே