5496
வஞ்சவினை எல்லாம் மடிந்தனவன் மாயைஇருள் 
அஞ்சிஎனை விட்டே அகன்றனவால் - எஞ்சலிலா 
இன்பமெலாம் என்றனையே எய்தி நிறைந்தனவால் 
துன்பமெலாம் போன தொலைந்து   
5497
அம்மை திரோதை அகன்றாள் எனைவிரும்பி 
அம்மையருட் சத்தி அடைந்தனளே - இம்மையிலே 
மாமாயை நீங்கினள்பொன் வண்ணவடி வுற்றதென்றும் 
சாமா றிலைஎனக்குத் தான்   
5498
நானே தவம்புரிந்தேன் நானிலத்தீர் அம்பலவன் 
தானேவந் தென்னைத் தடுத்தாண்டான் - ஊனே 
புகுந்தான்என் உள்ளம் புகுந்தான் உயிரில் 
புகுந்தான் கருணை புரிந்து   
5499
ஒன்றே சிவம்என் றுணர்ந்தேன் உணர்ந்தாங்கு 
நின்றேமெய்ஞ் ஞான நிலைபெற்றேன் - நன்றேமெய்ச் 
சித்தியெலாம் பெற்றேன் திருஅம்ப லத்தாடி 
பத்திஎலாம் பெற்ற பலன்   
5500
தூக்கங் கெடுத்தான் சுகங்கொடுத்தான் என்னுளத்தே 
ஏக்கந் தவிர்த்தான் இருள்அறுத்தான் - ஆக்கமிகத் 
தந்தான் எனைஈன்ற தந்தையே என்றழைக்க 
வந்தான்என் அப்பன் மகிழ்ந்து