5501
வாட்டமெலாம் தீர்த்தான் மகிழ்வளித்தான் மெய்ஞ்ஞான 
நாட்டமெலாம் தந்தான் நலங்கொடுத்தான் - ஆட்டமெலாம் 
ஆடுகநீ என்றான்தன் ஆனந்த வார்கழலைப் 
பாடுகநீ என்றான் பரன்   
5502
தான்நான் எனும்பேதந் தன்னைத் தவிர்த்தான்நான் 
ஆனான்சிற் றம்பலவன் அந்தோநான் - வானாடர் 
செய்தற் கரியதவம் செய்தேன் மகிழ்கின்றேன் 
எய்தற் கரியசுகம் ஏய்ந்து   
5503
சுத்த வடிவும் சுகவடிவாம் ஓங்கார 
நித்த வடிவும் நிறைந்தோங்கு - சித்தெனும்ஓர் 
ஞான வடிவுமிங்கே நான்பெற்றேன் எங்கெங்கும் 
தானவிளை யாட்டியற்றத் தான்   
5504
நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்சொல் வார்த்தைஅன்றி 
நான்உரைக்கும் வார்த்தைஅன்று நாட்டீர்நான் - ஏன்உரைப்பேன் 
நான்ஆர் எனக்கெனஓர் ஞானஉணர் வேதுசிவம் 
ஊன்நாடி நில்லா உழி   
5505
ஆரணமும் ஆகமமும் ஆங்காங் குரைக்கின்ற 
காரணமும் காரியமும் காட்டுவித்தான் - தாரணியில் 
கண்டேன் களிக்கின்றேன் கங்குல்பகல் அற்றவிடத் 
துண்டேன் அமுதம் உவந்து