5506
துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன் சுத்தசிவ 
சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் - என்மார்க்கம் 
நன்மார்க்கம் என்றேவான் நாட்டார் புகழ்கின்றார் 
மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து   
5507
பன்மார்க்கம் எல்லாம் பசையற் றொழிந்தனவே 
சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே - சொன்மார்க்கத் 
தெல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான் 
கொல்லா நெறிஅருளைக் கொண்டு   
5508
சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப 
நீதிஇயல் ஆச்சிரம நீட்டென்றும் - ஓதுகின்ற 
பேயாட்ட மெல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம் 
வாயாட்டம் தீர்ந்தனவே மற்று   
5509
சிந்தா குலந்தவிர்த்துச் சிற்றம் பலப்பெருமான் 
வந்தான் எனைத்தான் வலிந்தழைத்தே - ஐந்தொழிலும் 
நீயேசெய் என்றெனக்கே நேர்ந்தளித்தான் என்னுடைய 
தாயே அனையான் தனித்து   
5510
கூகா எனஅடுத்தோர் கூடி அழாதவண்ணம் 
சாகா வரம்எனக்கே தந்திட்டான் - ஏகாஅன் 
ஏகா எனமறைகள் ஏத்துஞ்சிற் றம்பலத்தான் 
மாகா தலனா மகிழ்ந்து