5511
நாடுகின்ற தெம்பெருமான் நாட்டமதே நான்உலகில் 
ஆடுகின்ற தெந்தைஅருள் ஆட்டமதே - பாடுகின்ற 
பாட்டெல்லாம் அம்பலவன் பாத மலர்ப்பாட்டே 
நீட்டெல்லாம் ஆங்கவன்றன் நீட்டு   
5512
சத்தியஞ்செய் கின்றேன் சகத்தீர் அறிமின்கள் 
சித்திஎலாம் வல்ல சிவம்ஒன்றே - நித்தியம்என் 
றெண்ணுமெண்ணத் தாலேநம் எண்ணமெலாம் கைகூடும் 
நண்ணுமின்பத் தேன்என்று நான்   
5513
நானே தவம்புரிந்தேன் நம்பெருமான் நல்அருளால் 
நானே அருட்சித்தி நாடடைந்தேன் - நானே 
அழியா வடிவம் அவைமூன்றும் பெற்றேன் 
இழியாமல் ஆடுகின்றேன் இங்கு   
5514
எவ்வுலகும் அண்டங்கள் எத்தனையும் நான்காண 
இவ்வுலகில் எந்தை எனக்களித்தான் - எவ்வுயிரும் 
சன்மார்க்க சங்கம் தனைஅடையச் செய்வித்தே 
என்மார்க்கம் காண்பேன் இனி   
5515
சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி 
நேத்திரங்கள் போற்காட்ட நேராவே - நேத்திரங்கள் 
சிற்றம் பலவன் திருவருட்சீர் வண்ணமென்றே 
உற்றிங் கறிந்தேன் உவந்து