5516
வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர் 
வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச் 
சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை 
என்ன பயனோ இவை   
5517
சாகாத கல்வித் தரம்அறிதல் வேண்டுமென்றும் 
வேகாத கால்உணர்தல் வேண்டுமுடன் - சாகாத் 
தலைஅறிதல் வேண்டும் தனிஅருளால் உண்மை 
நிலைஅடைதல் வேண்டும் நிலத்து   
5518
பொய்உரைஎன் றெண்ணுதிரேல் போமின் புறக்கடையில் 
மெய்யுரைஎன் றெண்ணுதிரேல் மேவுமினோ - ஐயனருள் 
சித்திஎலாம் வல்ல திருக்கூத் துலவாமல் 
இத்தினந்தொட் டாடுகிற்பான் இங்கு   
5519
வான்வந்த தேவர்களும் மால்அயனும் மற்றவரும் 
தான்வந்து சூழ்ந்தார் தலைக்கடையில் - தேன்வந்த 
மங்கை சிவகாம வல்லியொடும் எம்பெருமான் 
இங்குநடஞ் செய்வான் இனி   
5520
சத்திஎலாம் கொண்டதனித் தந்தை நடராயன் 
சித்திஎலாம் வல்லான் திருவாளன் - நித்தியன்தான் 
ஊழிபல சென்றாலும் ஓவாமல் இவ்விடத்தே 
வாழிநடஞ் செய்வான் மகிழ்ந்து