5521
இன்று தொடங்கியிங்கே எம்பெருமான் எந்நாளும் 
நன்று துலங்க நடம்புரிவான் - என்றுமென்சொல் 
சத்தியம்என் றெண்ணிச் சகத்தீர் அடைமின்கள் 
நித்தியம்பெற் றுய்யலாம் நீர்   
5522
என்உடலும் என்பொருளும் என்உயிரும் தான்கொண்டான் 
தன்உடலும் தன்பொருளும் தன்உயிரும் - என்னிடத்தே 
தந்தான் அருட்சிற் சபையப்பா என்றழைத்தேன் 
வந்தான்வந் தான்உள் மகிழ்ந்து   
5523
செத்தாரை எல்லாம் திரும்ப எழுப்புதல்இங் 
கெத்தால் முடியுமெனில் எம்மவரே - சித்தாம் 
அருட்பெருஞ் சோதி அதனால் முடியும் 
தெருட்பெருஞ் சத்தியம்ஈ தே   
5524
இவ்வுலகில் செத்தாரை எல்லாம் எழுகஎனில் 
எவ்வுலகும் போற்ற எழுந்திருப்பார் - செவ்வுலகில் 
சிற்றம் பலத்தான் திருவருள்பெற் றார்நோக்கம் 
உற்றவரை உற்றவர்கள் உற்று   
5525
யான்புரிதல் வேண்டுங்கொல் இவ்வுலகில் செத்தாரை 
ஊன்புரிந்து மீள உயிர்ப்பித்தல் - வான் புரிந்த 
அம்பலத்தான் நல்லருளால் அந்தோநான் மேற்போர்த்த 
கம்பலத்தால் ஆகும் களித்து