5536
மலங்கழிந் துலகவர் வானவர் ஆயினர் 
வலம்பெறு சுத்தசன் மார்க்கம் சிறந்தது 
பலம்பெறு மனிதர்கள் பண்புளர் ஆயினர் 
நலம்பெறும் அருட்பெருஞ் சோதியார் நண்ணவே   
5537
முன்னுள மார்க்கங்கள் யாவும் முடிந்தன 
மன்னுள சுத்தசன் மார்க்கம் சிறந்தது 
பன்னுளந் தெளிந்தன பதிநடம் ஓங்கின 
என்னுளத் தருட்பெருஞ் சோதியார் எய்தவே   
5538
இடம்பெற்ற உயிர்எலாம் விடம்அற்று வாழ்ந்தன 
மடம்பெற்ற மனிதர்கள் மதிபெற்று வாழ்கின்றார் 
திடம்பெற்றே எழுகின்றார் செத்தவர் தினந்தினம் 
நடம்பெற்ற அருட்பெருஞ் சோதியார் நண்ணவே   
5539
அண்டமும் அகிலமும் அருளர சாட்சியைக் 
கொண்டன ஓங்கின குறைஎலாம் தீர்ந்தன 
பண்டங்கள் பலித்தன பரிந்தென துள்ளத்தில் 
எண்டகும் அருட்பெருஞ் சோதியார் எய்தவே   
5540
குணங்கள் சிறந்தன குற்றங்கள் அற்றன 
மணங்கள் விளங்கின வாழ்வுகள் ஓங்கின 
பிணங்கள் எலாம்உயிர் பெற்றெழுந் தோங்கின 
இணங்க அருட்பெருஞ் சோதியார் எய்தவே