5546
ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத் தாடும் 
சோதி தன்னையே நினைமின்கள் சுகம்பெற விழைவீர் 
நீதி கொண்டுரைத் தேன்இது நீவீர்மேல் ஏறும் 
வீதி மற்றைய வீதிகள் கீழ்ச்செலும் வீதி   
5547
நாதம் சொல்கின்ற திருச்சிற்றம் பலத்திலே நடிக்கும் 
பாதம் சொல்கின்ற பத்தரே நித்தர்என் றறிமின் 
வேதம் சொல்கின்ற பரிசிது மெய்ம்மையான் பக்க 
வாதஞ் சொல்கிலேன் நடுநின்று சொல்கின்றேன் மதித்தே   
5548
துரிய மேல்பர வெளியிலே சுகநடம் புரியும் 
பெரிய தோர்அருட் சோதியைப் பெறுதலே எவைக்கும் 
அரிய பேறுமற் றவைஎலாம் எளியவே அறிமின் 
உரிய இம்மொழி மறைமொழி சத்தியம் உலகீர்   
5549
ஆக மாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும் 
பாக மாம்பர வெளிநடம் பரவுவீர் உலகீர் 
மோக மாந்தருக் குரைத்திலேன் இதுசுகம் உன்னும் 
யோக மாந்தர்க்குக் காலமுண் டாகவே உரைத்தேன்   
5550
வான நாடரும் நாடரும் மன்றிலே வயங்கும் 
ஞான நாடகக் காட்சியே நாம்பெறல் வேண்டும் 
ஊன நாடகக் காட்சியால் காலத்தை ஒழிக்கும் 
ஈன நாடகப் பெரியர்காள் வம்மினோ ஈண்டே