5556
கட்டோ டே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர் 

கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர் 
பட்டோ டே பணியோடே திரிகின்றீர் தெருவில் 

பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நேரீர் 
கொட்டோ டே முழக்கோடே கோலங்காண் கின்றீர் 

குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர் 
எட்டோ டே இரண்டுசேர்த் தெண்ணவும் அறியீர் 

எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே   
5557
ஆறாமல் அவியாமல் அடைந்தகோ பத்தீர் 

அடர்வுற உலகிடை அஞ்சாது திரிவீர் 
மாறாமல் மனஞ்சென்ற வழிசென்று திகைப்பீர் 

வழிதுறை காண்கிலீர் பழிபடும் படிக்கே 
நாறாத மலர்போலும் வாழ்கின்றீர் மூப்பு 

நரைதிரை மரணத்துக் கென்செயக் கடவீர் 
ஏறாமல் வீணிலே இறங்குகின் றீரே 
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே   
5558
ஆயாமை யாலேநீர் ஆதிஅ னாதி 

ஆகிய சோதியை அறிந்துகொள் கில்லீர் 
மாயாமை பிறவாமை வழியொன்றும் உணரீர் 

மறவாமை நினையாமை வகைசிறி தறியீர் 
காயாமை பழுக்கின்ற கருத்தையும் கருதீர் 

கண்மூடித் திரிகின்றீர் கனிவொடும் இரப்போர்க் 
கீயாமை ஒன்றையே இன்துணை என்பீர் 

எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே   
5559
சாமாந்தர் ஆகாத் தரஞ்சிறி துணரீர் 

தத்துவ ஞானத்தை இற்றெனத் தெரியீர் 
மாமாந்த நோயுற்ற குழவியில் குழைந்தீர் 

வாழ்க்கையி லேஅற்ப மகிழ்ச்சியும் பெற்றீர் 
காமாந்த காரத்தில் கண்மூடித் திரிவீர் 

கற்பன கற்கிலீர் கருத்தனைக் கருதா 
தேமாந்து தூங்குகின் றீர்விழிக் கின்றீர் 

எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே   
5560
அச்சையும் உடம்பையும் அறிவகை அறியீர் 

அம்மையும் அப்பனும் ஆர்எனத் தெரியீர் 
பச்சையும் செம்மையும் கருமையும் கூடிப் 

பலித்தநும் வாழ்க்கையில் பண்பொன்றும் இல்லீர் 
பிச்சையிட் டுண்ணவும் பின்படு கின்றீர் 

பின்படு தீமையின் முன்படு கின்றீர் 
இச்சையில் கண்மூடி எச்சகம் கண்டீர் 

எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே