5576
நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே 

நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு 
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான 

நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று 
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர் 

மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் 
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன் 

பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே   
5577
புகுந்தருணம் இதுகண்டீர் நம்மவரே நான்தான் 

புகல்கின்றேன் என்மொழிஓர் பொய்மொழிஎன் னாதீர் 
உகுந்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும் 

உடைமைகளும் உலகியலும் உற்றதுணை அன்றே 
மிகுந்தசுவைக் கரும்பேசெங் கனியேகோற் றேனே 

மெய்ப்பயனே கைப்பொருளே விலையறியா மணியே 
தகுந்ததனிப் பெரும்பதியே தயாநிதியே கதியே 

சத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே   
5578
பணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகீர் 

பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே 
துணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே 

துரியமுடி அனுபவமே சுத்தசித்தாந் தமதாய்த் 
தணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க 

சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று 
கணிந்துளத்தே கனிந்துநினைந் துரைத்திடில்அப் பொழுதே 

காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் ஆமே   
5579
கண்டதெலாம் அனித்தியமே கேட்டதெலாம் பழுதே 

கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே 
உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே 

உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே 
விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க 

மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே 
எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின் 

இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே   
5580
இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம் 

எல்லாம்செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம் 
அன்புடையீர் வம்மின்இங்கே சமரசசன் மார்க்கம் 

அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப் 
பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞான 

பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே 
வன்புடையார் பெறற்கரிதாம் மணியேசிற் சபையின் 

மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே