5581
தீமைஎலாம் நன்மைஎன்றே திருஉளங்கொண் டருளிச் 

சிறியேனுக் கருளமுதத் தெளிவளித்த திறத்தை 
ஆமயந்தீர்த் தியற்கைஇன்ப அனுபவமே மயமாய் 

அம்பலத்தே விளங்குகின்ற அருட்பெருஞ்சோ தியைஓர் 
ஓமயவான் வடிவுடையார் உள்ளகத்தே நிறைந்த 

ஒருபொருளைப் பெருங்கருணை உடையபெரும் பதியை 
நாமருவி இறவாத நலம்பெறலாம் உலகீர் 

நல்லஒரு தருணம்இது வல்லைவம்மின் நீரே   
5582
நீர்பிறரோ யான்உமக்கு நேயஉற வலனோ 

நெடுமொழியே உரைப்பன்அன்றிக் கொடுமொழிசொல் வேனோ 
சார்புறவே அருளமுதம் தந்தெனைமேல் ஏற்றித் 

தனித்தபெரும் சுகம்அளித்த தனித்தபெரும் பதிதான் 
சீர்பெறவே திருப்பொதுவில் திருமேனி தரித்துச் 

சித்தாடல் புரிகின்ற திருநாள்கள் அடுத்த 
ஓர்புறவே இதுநல்ல தருணம்இங்கே வம்மின் 

உலகியலீர் உன்னியவா றுற்றிடுவீர் விரைந்தே   
5583
விரைந்துவிரைந் தடைந்திடுமின் மேதினியீர் இங்கே 

மெய்மைஉரைக் கின்றேன்நீர் வேறுநினை யாதீர் 
திரைந்துதிரைந் துளுத்தவரும் இளமைஅடைந் திடவும் 

செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய 
வரைந்துவரைந் தெல்லாஞ்செய் வல்லசித்தன் தானே 

வருகின்ற தருணம்இது வரம்பெறலாம் நீவீர் 
கரைந்துகரைந் துளம்உருகிக் கண்களின்நீர் பெருகிக் 

கருணைநடக் கடவுளைஉட் கருதுமினோ களித்தே   
5584
களித்துலகில் அளவிகந்த காலம்உல கெல்லாம் 

களிப்படைய அருட்சோதிக் கடவுள்வரு தருணம் 
தெளித்திடும்எத் தருணம்அதோ என்னாதீர் இதுவே 

செத்தவரை எழுப்புகின்ற திகழ்தருணம் உலகீர் 
ஒளித்துரைக்கின் றேன்அலன்நான் வாய்ப்பறைஆர்க் கின்றேன் 

ஒருசிறிதும் அச்சமுறேன் உள்ளபடி உணர்ந்தேன் 
அளித்திடுசிற் றம்பலத்தென் அப்பன்அருள் பெறவே 

ஆசைஉண்டேல் வம்மின்இங்கே நேசமுடை யீரே   
5585
ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான் 

அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன் 
ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான் 

எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான் 
தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத் 

திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே 
மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர் 

முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே