5586
அடைந்திடுமின் உலகீர்இங் கிதுதருணம் கண்டீர் 

அருட்சோதிப் பெரும்பதிஎன் அப்பன்வரு தருணம் 
கடைந்ததனித் திருவமுதம் களித்தருத்தி எனக்கே 

காணாத காட்சிஎலாம் காட்டுகின்ற தருணம் 
இடைந்தொருசார் அலையாதீர் சுகம்எனைப்போல் பெறுவீர் 

யான்வேறு நீர்வேறென் றெண்ணுகிலேன் உரைத்தேன் 
உடைந்தசம யக்குழிநின் றெழுந்துணர்மின் அழியா 

ஒருநெறியாம் சன்மார்க்கத் திருநெறிபெற் றுவந்தே   
5587
திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச் 

சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு 
வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து 

வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல் 
பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப் 

பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே 
கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர் 

கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே   
5588
உண்மையுரைக் கின்றேன்இங் குவந்தடைமின் உலகீர் 

உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர் 
எண்மையினான் எனநினையீர் எல்லாஞ்செய் வல்லான் 

என்னுள்அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர் 
தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில் 

சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக் 
கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள்எனப் புகலும் 

கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே   
5589
தானேதான் ஆகிஎலாம் தானாகி அலனாய்த் 

தனிப்பதியாய் விளங்கிடும்என் தந்தையைஎன் தாயை 
வானேஅவ் வான்கருவே வான்கருவின் முதலே 

வள்ளால்என் றன்பரெலாம் உள்ளாநின் றவனைத் 
தேனேசெம் பாகேஎன் றினித்திடுந்தௌ; ளமுதைச் 

சிற்சபையில் பெருவாழ்வைச் சிந்தைசெய்மின் உலகீர் 
ஊனேயும் உடலழியா தூழிதொறும் ஓங்கும் 

உத்தமசித் தியைப்பெறுவீர் சத்தியம்சொன் னேனே   
5590
சத்தியவே தாந்தமெலாம் சித்தாந்தம் எல்லாம் 

தனித்தனிமேல் உணர்ந்துணர்ந்தும் தனையுணர்தற் கரிதாய் 
நித்தியசிற் சபைநடுவே நிறைந்துநடம் புரியும் 

நித்தபரி பூரணனைச் சித்தசிகா மணியை 
அத்தகையோர் பெரும்பதியை அருமருந்தை அடியேன் 

ஆவியைஎன் ஆவியிலே அமர்ந்ததயா நிதியைச் 
சித்தியெலாம் எனக்களித்த சிவகதியை உலகீர் 

சிந்தைசெய்து வாழ்த்துமினோ நிந்தைஎலாம் தவிர்ந்தே